Published : 17 Apr 2023 05:25 AM
Last Updated : 17 Apr 2023 05:25 AM

தபால் மூலமாக மட்டுமே ஓட்டுநர் உரிமம், பதிவுச் சான்று விநியோகம்: போக்குவரத்துத் துறை முடிவு

சென்னை: ஓட்டுநர் உரிமம், பதிவுச் சான்று (ஆர்சி) போன்றவற்றை தபால் மூலமாக மூலமாக விநியோகிக்க தமிழக போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழக போக்குவரத்துத் துறையின் கீழ் வழங்கப்படும் சேவைகளை முடிந்த வரையில்இணைய வழியில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை பழகுநர் உரிமம் பெறுதல், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், ஓட்டுநர் உரிம முகவரி மாற்றம் உள்ளிட்ட 6 சேவைகள் இணையவழியில் பெறும் வகையில் போக்குவரத்துத் துறை ஏற்பாடு செய்துள்ளது. இத்துடன் மேலும் 42 சேவைகளை இணையவழியில் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறான நடைமுறைகள் மூலம் அலுவலகத்தில் இடைத்தரகர்கள் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதோடு, துறை மீதான லஞ்ச குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இதையொட்டி, தபால் மூலமாக மட்டுமே ஓட்டுநர் உரிமம், பதிவுச் சான்று போன்றவற்றை விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பபோக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக தபால்துறையுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

வழக்கமான உரிமம்மற்றும் பதிவுச் சான்று கட்டணத்துடன் கூடுதலாக ரூ.50 வசூலிக்கப்படும். இதன் மூலம் சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்களுக்கு அதிகபட்சம் ரூ.1,150 வசூலிக்கப்படக் கூடும். இதேபோல, பதிவுச் சான்றைப் பொறுத்தவரை சாலை பாதுகாப்பு வரி, வாழ்நாள் வரி, சேவை கட்டணம் தவிர்த்து அதிகபட்சமாக ரூ.650 வசூலிக்கக் கூடும்.

இடைத்தரகர்கள் மற்றும் லஞ்சத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் முதலில் பொதுமக்கள் அலுவலகத்துக்கு வருவதைத் தடுக்க வேண்டும். பொதுமக்கள் ஒருமுறை அலுவலகத்துக்கு வந்து, தேர்வில் பங்கேற்றால் போதுமானது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x