Published : 17 Apr 2023 05:47 AM
Last Updated : 17 Apr 2023 05:47 AM

இந்து சமுதாய பணிகளில் அனைவரும் இணைய வேண்டும்: ஆர்எஸ்எஸ் தென்பாரத தலைவர் வன்னியராஜன் அழைப்பு

சென்னை கொரட்டூரில் நேற்று நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணியில் பங்கேற்றோர்.படம்: பு.க.பிரவீன்

சென்னை: இந்து சமுதாயப் பணிகளில் அனைவரும் இணைய வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தென்பாரத தலைவர் வன்னியராஜன் கூறினார்.

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து, தமிழகம் முழுவதும் 45 இடங்களில் ஏப். 16-ம் தேதி பேரணி நடத்தப்படும் என்று ஆர்எஸ்எஸ் அறிவித்தது. இதற்கிடையே, பேரணியின்போது பின்பற்றப்பட வேண்டிய 12 கட்டுப்பாடுகளை காவல் துறை விதித்திருந்தது.

அவற்றைப் பின்பற்றி நேற்று தமிழகம் முழுவதும் ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்றது. சென்னை கொரட்டூரில் நடைபெற்ற பேரணியில், பெரம்பூர், திருவொற்றியூர், அம்பத்தூர், வடபழனி பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என 1,200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

விவேகானந்த வித்யாலயா பள்ளி வாயிலில் ஆர்எஸ்எஸ் கொடியேற்றி மரியாதை செய்து, உறுதிமொழியேற்ற அமைப்பினர், அங்கிருந்து மேளதாளம் முழங்க பேரணியாகச் சென்றனர்.

மத்திய இணையமைச்சர் எல்.முருகனும், சீருடை அணிந்து பேரணியில் பங்கேற்றார். அணிவகுப்புக்குப் பின்னர் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தென்பாரத தலைவர் வன்னியராஜன் பேசியதாவது: தேசத்தை உயர்த்தும் லட்சியத்துடன் இணைந்து செயலாற்றுபவர்களை கிராமந்தோறும் உருவாக்கும் வேலையை ஆர்எஸ்எஸ் மேற்கொண்டு வருகிறது.

தேசத்தை தெய்வமாகப் போற்றக் கூடியவர்களை ஆர்எஸ்எஸ் தயார் செய்கிறது. அதை அமைதியாக மேற்கொள்ள வேண்டியிருப்பதால், ஆரவாரத்துக்கும், பிரச்சாரத்துக்கும் இடமில்லை.

இந்து சமுதாயம் உறக்கத்தில் இருக்கிறது. அது கொஞ்சம்கண் திறந்தாலே, ஏராளமானோருக்கு கலக்கம் ஏற்படுகிறது. முழுமையாக செயல்படத் தொடங்கினால், தேச விரோதிகளுக்கு இங்கு வேலை இருக்காது. எனவேதான், ஆர்எஸ்எஸ் அமைப்பை காலூன்ற விடமாட்டோம் என்கின்றனர்.

இந்து சமுதாயம் வலிமைபெற்ற சமுதாயமாக மாற வேண்டும். பலவீனமாக இருந்த இடத்தில்தான் வன்முறை நிகழும். ஜாதி வேறுபாடுகளை மறந்து, இந்து சமுதாயப் பணிகளில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்வில், அனைத்து செட்டியார் சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் அருணாச்சலம், தமிழ்நாடு நாடார் சங்க மாநிலத் தலைவர் முத்து ரமேஷ், வீர வன்னியர் பாதுகாப்பு சங்க மாநிலத் தலைவர் ஜெய் ஹரி, போயர் சங்க மாநிலத் தலைவர் பாலச்சந்தர், சவுராஷ்டிரா சமுதாயத் தலைவர் எஸ்.ஆர்.அமர்நாத், மயன் வம்ச மஹா சபாமாநிலச் செயலாளர் எஸ்.கே.சிவகுமார், கிராம மக்கள் நலச்சங்கத் தலைவர் சிபி.பச்சையப்பன், பறையர் சங்க நிர்வாகி ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பேரணி நடத்துவது ஏன்?: பேரணி தொடர்பாக அமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், “ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு என்பது, சங்கத்தின் அன்றாடப் பயிற்சியின் ஓர் அங்கம். பொதுமக்கள் மற்றும் இந்து சமுதாயத்துக்கு நம்பிக்கை ஏற்படுத்தவும், சுய ஒழுக்கத்துடன் நேர்மை தவறாமையைக் கடைப்பிடிக்கவும் பேரணி நடத்தப்படுகிறது.

இந்து சமுதாயத்தினர் ஒற்றுமையாகவும், கட்டுக்கோப்பாகவும், சீராகவும் அணிவகுத்துச் செல்ல முடியும் என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் விதைக்கும் ஒரு நிகழ்வாக பேரணிஅமைகிறது” எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x