Published : 17 Apr 2023 06:24 AM
Last Updated : 17 Apr 2023 06:24 AM
மதுரை: முல்லை பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் இதுவரை 60 சதவீதம் முடிந்துள்ளன. இலக்கு நிர்ணயித்தபடி வரும் டிசம்பரில் குடிநீர் விநியோகம் நடைபெறுமா என கேள்வி எழுந்துள்ளது.
மதுரை மாநகராட்சியின் குடிநீர் தேவைக்காக அம்ரூத்-3 திட்டத்தின் கீழ், ரூ.1,685.76 கோடியில் முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் லோயர் கேம்ப் பகுதியிலிருந்து நேரடியாகமதுரைக்கு குடிநீர் கொண்டுவரப்பட்டு விநியோகம் செய்யப்பட உள்ளது. இப்பணிகள் பகுதி-1, பகுதி-2 என 2 பகுதிகளாக நடக்கின்றன.
திட்டப்பணிகளை மேயர் இந்திராணி தலைமையிலான அனைத்துக் கட்சி கவுன்சிலர்கள் லோயர்கேம்ப் பகுதிக்குச் சென்று பார்வையிட்டனர்.
இந்நிலையில், மதுரை மாநகரப் பொறியாளர் அரசு கூறியதாவது: முல்லை பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தில் பகுதி 1-ல் உள்ள திட்டப் பணிகள் ஓரளவு நிறைவடையும் தருவாயில் உள்ளன. வரும் டிசம்பரில் பெரியாறு அணையிலிருந்து குடிநீரை சுத்திகரித்து மதுரையில் உள்ள மேல்நிலை தொட்டிகளுக்குக் கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதி-1 திட்டம் முடிந்ததும் மாநகராட்சி 100 வார்டுகளிலும் தற்போது விநியோகம் செய்யப்படும் பழைய குடிநீர் குழாய்களிலேயே பெரியாறு கூட்டுக் குடிநீரையும் விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பகுதி 2-ல், பழைய 72 வார்டுகள், விரிவாக்கம் செய்யப்பட்ட 28 வார்டுகளில் புதிய குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெறும்.
பழைய வார்டுகளில் 2025-ம்ஆண்டும், விரிவாக்கம் செய்யப்பட்ட வார்டுகளில் 2024-ம் ஆண்டும்புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் முடிவடையும். அதன்பின்னர், புதிய குழாய்கள் மூலம் முல்லை பெரியாறு குடிநீர் விநி யோகம் செய்யப்படும்.
தற்போது 60 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளன. அவ்வப்போது பொறியாளர்கள் குழுவினர், முல்லை பெரியாறு சென்று பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர். நிர்ணயிக்கப்பட்ட காலகெடுவுக்குள் பணிகளை முடிக்க முடுக்கிவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மாநகராட்சி அதிமுக எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா கூறுகையில், மேயருடன் கவுன்சிலர்கள் அனைவரும் லோயர் கேம்ப் உள்ளிட்ட பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் நடைபெறும் இடங்களை பார்வையிடச் சென்றிருந்தோம். டிசம்பரில் மதுரைக்கு குடிநீர் கொண்டுவரும் பணிகளை முடித்துவிடுவதாகக் கூறுகின்றனர். ஆனால், லோயர் கேம்ப் பகுதியில் 40 சதவீதப் பணிகள்தான் முடிந்துள்ளன. எனவே, டிசம்பருக்குள் பணிகளை முடிக்க முடியாது, என்றார்.
மதுரை நகரில் ஒருபுறம் பாதாள சாக்கடைப் பணிகள் நடந்து வருகின்றன. மற்றொரு புறம் 100 வார்டுகளிலும் புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளும் தொடங்கும்போது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு மக்கள் சிரமத்துக்குள்ளாவார்கள்.
எனவே, மாநகராட்சி நிர்வாகம் உரிய முன்னேற்பாடுகளைச் செய்து மக்களுக்கு சிரமம் ஏதுமின்றி பணிகள் நடைபெற மக்கள் பிரதிநிதிகள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT