Published : 17 Apr 2023 06:29 AM
Last Updated : 17 Apr 2023 06:29 AM
காரைக்குடி: காரைக்குடி சிறப்புநிலை நகராட்சி விரைவில் மாநகராட்சியாகிறது. இந்நகராட்சி பகுதியுடன் ஒரு பேரூராட்சி, 5 ஊராட்சிகள் இணைக்கப்பட்டு மாநகராட்சியாக அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டமாக இருந்தபோது 1928-ம் ஆண்டு காரைக்குடி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. சிவகங்கை மாவட்டமாக பிரிந்த பின்பு 1988-ம் ஆண்டு தேர்வு நிலை நகராட்சியாகவும், 2013-ம் ஆண்டு சிறப்பு நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.
தற்போது காரைக்குடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இந்நகராட்சி 13.75 சதுர கி.மீ. பரப்பு கொண்டது. 1.50 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். நகராட்சியின் ஆண்டு வருவாய் ரூ.50 கோடிக்கு மேல் உள்ளது. அரசு போக்குவரத்துக் கழகம், பிஎஸ்என்எல், ஆவின் போன்றவற்றின் மண்டல அலுவலகங்கள் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் உள்ளன.
ஏற்கெனவே சிக்ரி, அழகப்பா பல்கலைக்கழகம், அரசு பொறியியல் கல்லூரி உள்ள நிலையில், கடந்த ஆண்டு வேளாண்மைக் கல்லூரி, சட்டக் கல்லூரி தொடங்கப்பட்டன. தற்போது டைடல் பார்க், ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்குடிக்கு தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். காரைக்குடியை மாநகராட்சியாக தரம் உயர்த்தக் கோரி 2015-ம் ஆண்டு மே மாதம் அப்போதைய தலைவர் கற்பகம் தலைமையிலான நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதன் பின்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் அண்மையில் சட்டப்பேரவையில் காரைக்குடி, திருவண்ணாமலை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாமக்கல் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார். அதன்படி விரைவில் காரைக்குடி மாநகராட்சியாக அறிவிக்கப்பட உள்ளது.
புதிய பகுதிகள்: காரைக்குடி நகராட்சியுடன் கோட்டையூர் பேரூராட்சி மற்றும் சங்கராபுரம், கோவிலூர், இலுப்பக்குடி, அரியக்குடி, அமராவதி-புதூர் ஆகிய 5 ஊராட்சிகளை இணைக்க வேண்டும் என நகராட்சி தலைவர் முத்துத்துரை தலைமையில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளை இணைத்தால் காரைக்குடியின் மக்கள்தொகை 3 லட்சத்தை எட்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT