Published : 17 Apr 2023 01:17 AM
Last Updated : 17 Apr 2023 01:17 AM
சேலம்: ஊழல் பட்டியல் விவகாரத்தில், அண்ணாமலை பின்வாங்கக் கூடாது என்று பெங்களூரு புகழேந்தி சேலத்தில் தெரிவித்தார்.
ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சார்பில் திருச்சியில் நடைபெறவுள்ள முப்பெரும் விழா மாநாடு குறித்த கூட்டம் சேலத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். பெங்களூரு புகழேந்தி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, கூட்டத்தினரிடையே பேசினார்.
பின்னர் பெங்களூரு புகழேந்தி செய்தியாளர்களிடம் கூறியது: திருச்சியில் ஓபிஎஸ் தலைமையில் முப்பெரும் மாநாடு 24-ம் தேதியன்று பிரம்மாண்டாக நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் சசிகலா பங்கேற்க முறைப்படி அழைப்பு விடுக்கப்படும். இந்த மாநாட்டுக்கு எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ஆகிய 4 பேரைத் தவிர மற்ற எவர் வேண்டுமானாலும் வரலாம்.
திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை, ஆட்சியில் இருந்த கட்சியின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன் என்று தெரிவித்துள்ளார். அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி உள்ளிட்டோர் ஆவேசப்படுவது ஏன்? பழனிசாமி சிறைக்கு செல்லும் நாட்கள் எண்ணப்படுகின்றன. அதனால்தான் அவர் கோபப்படுகிறார்.
பழனிசாமியின் அமைச்சர்கள்மீது ரூ. 47,000 கோடி ஊழல் புகார் ஏற்கனவே உள்ளது. அந்தப் புகார்கள்மீது திமுக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்று திமுகவிடம் அண்ணாமலை கேட்க வேண்டும். ஊழல் பட்டியல் விவகாரத்தில், அண்ணாமலை பின்வாங்கக் கூடாது. பழனிசாமி சிறைக்கு செல்லும் வரை அண்ணாமலை ஓயமாட்டார். ஊழலை ஒழிப்போம் என்று கூறும் பாஜக, அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும்.
அதிமுக அமைச்சர்கள் செய்த ஊழல் குறித்து பட்டியல் தயாரித்து வருகிறோம். அதனை திருச்சி மாநாட்டுக்குப் பின்னர் வெளியிடுவோம். எம்ஜிஆருக்கு நிகர் எந்த தலைவரும் இல்லை. ஆனால், அவர் கொண்டு வந்த கட்சியின் விதிகளையே, எதிர்ககட்சித் தலைவர் பழனிசாமி மாற்றிவிட்டார். எம்ஜிஆர் போல, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வேடமணிந்தது கண்டனத்துக்கு உரியது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT