Published : 16 Apr 2023 07:54 PM
Last Updated : 16 Apr 2023 07:54 PM
கரூர்: தமிழ்நாட்டு முதல்வர் என்ன சொல்கிறாரோ அதை ஆமோதித்து பேசவேண்டிய நிலைமை ஆளுநருக்கு ஏற்பட்டிருக்கிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் குளித்தலை தனியார் திருமண மண்டபத்தில் மதிமுக மாணவரணி மாநில செயலாளர் பால சசிகுமார் - திவ்யா ஆகியோர் திருமணத்தை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தலைமை கழக செயலாளர் துரைவைகோ ஆகியோர் தலைமையேற்று இன்று (ஏப். 16ம் தேதி) நடத்தி வைத்தனர். மணமக்களை வைகோ வாழ்த்தி பேசினார்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் வைகோ கூறியது, ''தரம் தாழ்ந்து பேசுவதிலே போட்டி வைத்தால் ஆளுநர் ஆர்.என்.ரவியை தாண்டமுடியாது. முதல் நாள் ஒன்றை பேசுகிறார். மறுநாள் மறுத்து பேசுகிறார். முதல் நாள் ஒன்றை சொல்கிறார். மறுநாள் அதனை இல்லையென்று மறுத்து பேசுகிறார். கடைசியில் தமிழ்நாட்டு முதல்வர் என்ன சொல்கிறாரோ அதை ஆமோதித்து பேசவேண்டிய நிலைமை ஆளுநருக்கு ஏற்பட்டிருக்கிறது. காரணம் அவர் உளறிக் கொட்டி கொண்டிருந்தார்.
அரண்மனையில் இருக்கிற பிறவிகள் வாயை பொத்திக்கொண்டு இருக்கவேண்டும். ரொம்ப அதிகமாக சத்தம் போடக்கூடாது. தமிழகத்தில் வந்து தமிழை அழித்து விடலாம் என்று நினைப்பில் பேச தொடங்கியவர் இந்தியால் தமிழை ஒன்றும் செய்ய முடியாது என்று பேசுகிற நிலைமைக்கு வந்திருக்கிறார் என்றால் அவருக்கு தான் மூக்கறுபட்டு போயிருக்கிறது.
இன்னொரு பக்கம் அண்ணாமலை தினமும் ஒன்றை பேசுகிறார். அவர் யாரை பற்றி பேசுகிறார் என்று தான் தெரியவில்லை. அவரால் எதையும் நிரூபிக்க முடியாது. திமுக ஆட்சி திராவிட மாடல் ஆட்சி. வெற்றிகரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. மக்கள் செல்வாக்கு இருக்கிறது. மக்களின் பேராதரவு இருக்கிறது. முதல்வர் ஒவ்வொரு நாளும் திட்டமிட்டு பணியாற்றுகிறார். அதில் வெற்றியும் பெறுகிறார். வரும் மதிமுக பொதுக்குழுவில் எனது திட்டங்களை எதிர்பாருங்கள'' என்றார். முன்னதாக, குளித்தலை காந்தி சிலை அருகே மதிமுக 30ம் ஆண்டு விழாவையொட்டி கட்சி கொடியை வைகோ ஏற்றி வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT