Published : 16 Apr 2023 04:54 PM
Last Updated : 16 Apr 2023 04:54 PM
சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணி இன்று நடைபெற்றது.
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணியை சுற்றுச்சுவருடன் கூடிய விளையாட்டு மைதானங்களில் நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து ஆர்எஸ்எஸ் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, திறந்தவெளியில் பேரணி நடத்த நிபந்தனைகளுடன் போலீஸார் அனுமதி அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில், திறந்தவெளியில் ஆர்எஸ்எஸ் பேரணி செல்ல அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தமிழகத்தில் 45 இடங்களில் திறந்த வெளியில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தமிழக காவல் துறை அனுமதி வழங்கியது.
மேலும், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு 12 நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளை போலீஸார் விதித்தனர். இதன்படி, பேரணியின்போது தனி நபர்கள், சாதி, மதம் பற்றி தவறாக பேசக்கூடாது. தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக எந்த கருத்தையும் பேசக்கூடாது. நாட்டின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஊறு விளைவிக்கும் எந்த ஒரு செயலிலும் ஈடுபடக் கூடாது. பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்ததாத வகையில் பேரணி மற்றும் நிகழ்ச்சி நடத்தி முடிக்க வேண்டும். கம்பு மற்றும் ஆயுதங்கள் எதையும் கைகளில் ஏந்தி செல்லக்கூடாது உட்பட 12 நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன்படி, தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. பேரணி முடிவில் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. இதன் காரணமாக, பேரணி நடக்கும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT