Published : 16 Apr 2023 04:37 PM
Last Updated : 16 Apr 2023 04:37 PM
சென்னை: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுக அரசு மக்களை ஏமாற்றுவதாக அதிமுக செயற்குழுவில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில், பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கட்சி செயற்குழு உறுப்பினர்கள் மாநில தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பிற மாநிலக் கழகச் செயலாளர்கள், கட்சி எம்பிக்கள், எம்எல்ஏக்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் (மகளிர்) என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்: திமுக அரசு பதவியேற்று இரண்டு ஆண்டு காலம் நிறைவடைய உள்ள நிலையிலும், தேர்தல் காலத்தில் திமுக அளித்த வாக்குறுதிகள் இன்றளவும் நிறைவேற்றப்படாமல் மக்களை ஏமாற்றும் வேலை நடக்கிறது. குறிப்பாக, ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும், பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100/- ரூபாய் மானியமாக வழங்கப்படும், மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும் என வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்றாவது நிறைவேற்றப்பட்டுள்ளதா?
வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதையும் தாண்டி, நேர் எதிர் திசையில் திமுக அரசு வேகமாக பயணிப்பது வேதனைக்குரியது. தேர்தல் வாக்குறுதியில், எல்லா பேருந்துகளிலும் மகளிர் இலவசமாக பயணிக்கலாம் என்று சொன்னவர்கள், ஆட்சிக்கு வந்தவுடன் குறிப்பிட்ட குறைவான பேருந்துகளில் மட்டும் இலவசம் என்றனர். பின்னர் அதில் பயணிப்போரையும் ``ஓசி’’ என்று அமைச்சர் ஒருவரே அசிங்கப்படுத்துகிறார். அனைத்து மகளிர்க்கும் மாதம் 1,000/- ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதிகளில் சொன்னவர்கள் இப்போது, தகுதி உடையோர்க்கு மட்டும் வழங்கப்படும் என்று அறிவித்து, தமிழ் நாட்டின் பெரும்பாலான குடும்பத் தலைவிகளை பயனாளர் ஆகவிடாமல் தடுப்பது, வெளிப்படையாக மக்களை ஏமாற்றும் வேலை இல்லையா? இப்படி, தேர்தல் வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வஞ்சனை செய்யும் திமுக அரசை இந்தச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றுமாறு திமுக அரசை இந்தச் செயற்குழு வலியுறுத்துகிறது.
சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்த வேண்டும்: திமுக அரசு பதவியேற்ற நாள் முதல் தமிழ் நாட்டில் சட்டம்-ஒழுங்கு முழுமையாக சீரழிந்து இருக்கிறது. மு.க. ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவியேற்ற சிறிது காலத்தில், தலைநகர் சென்னையின் மையப் பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகம் (மால்) ஒன்றில் நடைபெற்ற போதைப் பொருள் விருந்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடங்கி, சென்னை போரூர் பகுதியில் காரில் பயணித்த பெண் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சி செய்தி வரை, காவல் துறையும், உளவுத் துறையும் செயலிழந்துவிட்டதை முன்னறிவித்தன.
நாட்டில் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டுவரும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் மீண்டும் மீண்டும் அரசின் கவனத்திற்கு கொண்டுவந்தும், திமுக அரசு அதனை கண்டுகொள்ளவில்லை. இதன் தொடர்ச்சியாக இப்போது, நீதிமன்ற வளாகத்திலேயே ரவுடிகள் கத்தியுடன், கொலைக் கருவிகளுடன் நுழைந்து பட்டப் பகலில் படுகொலைகளை நிகழ்த்தும் காட்சிகள் அரங்கேறுகின்றன. பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் நடமாடும் நிலை ஏற்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பற்ற நிலையை உணர்கிறார்கள். நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. அதிமுக ஆட்சிக் காலங்களில் கட்டிக் காக்கப்பட்ட சட்டம்-ஒழுங்கை சீரழித்திருக்கின்ற மு.க. ஸ்டாலின் அரசை அதிமுக செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதோடு, இனியேனும் நாட்டில் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்த திமுக அரசு முன்வர வேண்டும் என்று செயற்குழு வலியுறுத்துகிறது.
கடன் சுமை அதிகரிப்புக்குக் கண்டனம்: தமிழ் நாட்டின் கடன் சுமையைக் குறைப்போம் என்று தேர்தல் வாக்குறுதியில் சொன்ன திமுக, இரண்டு ஆண்டுகால ஆட்சியில் கடன் அளவை குறைக்காதது மட்டுமல்ல, மேலும் 2.5 லட்சம் கோடி கடன் சுமையை அதிகப்படுத்தி உள்ளது. அதிமுக அரசு, உள்நாட்டு உற்பத்தியில் அனுமதிக்கப்பட்ட விழுக்காட்டிற்கு உள்ளாகவே கடன் இருக்குமாறு பார்த்துக்கொண்டது. ஆனால், புதிய திட்டங்கள் எதையுமே அறிவித்து செயல்படுத்தாத திமுக அரசு, 2.5 லட்சம் கோடி கடனை மட்டும் அதிகரித்துள்ளது என்றால், இந்த அரசின் நிர்வாகத் திறமையற்ற தன்மைக்கு இதைவிடவும் பெரிய சாட்சி எதுவும் தேவையில்லை. நிர்வாகத் திறமை கொஞ்சமும் இல்லாததால் மக்களின் மீது கடனை சுமத்தி, நாட்டை துயர்படுத்துகின்ற திமுக அரசுக்கு, இந்தச் செயற்குழு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறது.
தேர்தல் காலத்தில் பொய் வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து, மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக, ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வாழவே முடியாத நிலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. மாதம் ஒருமுறை மின் கணக்கீடு செய்வோம்; அதனால் மின் கட்டணம் குறையும் என்று ஆசை வார்த்தைகளை சொன்ன திமுக அரசு, அதையும் செய்யாமல் மின் கட்டணத்தையும் கடுமையாக உயர்த்தி உள்ளது. தமிழகம் முழுவதும் வரலாறு காணாத வகையில் 150 சதவீதம் வரையிலான சொத்து வரி உயர்வு; இதன் காரணமாக வாடகை வீடுகளில் வசிக்கும் மக்கள், மாத வாடகை உயர்வால் அவதியுறும் நிலை உருவாகி உள்ளது. குடிநீர் வரி உயர்வு, பால்விலை உயர்வு, கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு என்று சகல பொருட்களின் விலையையும் உயர்த்தி, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி, வேதனையின் விளிம்பில் மக்களை வாழ்க்கை நடத்த வைத்திருக்கும் திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கை இந்தச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
படிப்படியாக மதுவிலக்கு நோக்கி நகர வேண்டும்: தமிழ் நாட்டில் கஞ்சா புழக்கம் அதிகரித்திருக்கிறது என்பதைத் தாண்டி, இளம் தலைமுறையையே அழித்தொழிக்கும் செயற்கை மருந்துகள் பயன்பாடும் பெருகி வருகிறது. மிக சாதாரணமாக போதைப் பொருட்கள் கிடைக்கக் கூடிய மாநிலமாக தமிழ் நாடு மாறி இருப்பது பெரும் துயரம். எளிதாக மாணவர்கள், இளைஞர்கள் கைகளில் போதைப் பொருட்கள் கிடைக்கும் நிலை தற்போது உள்ளது. இதைத் தடுப்பதற்கு போதுமான நடவடிக்கையை திமுக அரசு எடுக்கவில்லை. மதுபானங்கள் விற்கும் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடைகள் விதிகளை மீறி 24 மணி நேரமும் இயங்குகின்ற அவலம் மாநிலம் முழுவதும் அரங்கேறுகிறது. கள்ளச் சந்தையில் மதுபான விற்பனையை அரசே கண்டுகொள்ளாமல் ஊக்குவிப்பது கொடுமையிலும் கொடுமை. வேலியே பயிரை மேயும் அவலம்! போதைப் பொருள் புழக்கத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, இளம் தலைமுறை சீரழிவதற்கு துணை போகின்ற திமுக அரசை இந்தச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. டாஸ்மாக் கள்ளச் சந்தை விற்பனையை ஒழித்து, படிப்படியாக மதுவிலக்கு நோக்கி நகர வேண்டும் என்று இந்தச் செயற்குழு வலியுறுத்துகிறது.
அதிமுக தலைமையில் கூட்டணி: வரவிருக்கின்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றியை ஈட்டிடவும்; அதற்கடுத்து வரவிருக்கின்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலிலும் முழுமையான பெருவெற்றியை ஈட்டி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நல்லாட்சி மீண்டும் மலரவும், அயாராது உழைத்திட சூளுரை ஏற்போம்; வெற்றி பெறுவோம் என்று செயற்குழு வீரசபதம் ஏற்கிறது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இவை மட்டுமின்றி,
ஆகிய தீர்மானங்களும் அதிமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT