Published : 16 Apr 2023 12:41 PM
Last Updated : 16 Apr 2023 12:41 PM
சென்னை: பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரத்தில் பொதுமக்கள், மொட்டை அடித்துக்கொண்டும் நாமம் போட்டுக்கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 2-வது சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த விமான நிலையத்துக்காக சுமார் 4,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அரசு புறம்போக்கு நிலங்கள் போக 2,000 ஏக்கர் அளவுக்கு விவசாய நிலங்களும், 2000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் கையகப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. நிலம் கையகப்படுத்துதல் பணி மற்றும் விமான நிலையம் திட்டத்திற்கு 13 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக கிராமசபைக் கூட்டங்களில் தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதுவரை, 5 முறை கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரத்தில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மொட்டை அடித்துக்கொண்டும் நாமம் போட்டுக்கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு தேவையான விரிவான தொழில்நுட்ப பொருளாதார ( DTER ) அறிக்கையை தயாரிப்பதற்காக ஆலோசகர் நிறுவனம் விரைவில் நியமிக்கப்படும் என்று தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT