Published : 16 Apr 2023 12:12 PM
Last Updated : 16 Apr 2023 12:12 PM

சாதி ஆணவக் கொலைகளை தடுக்க வலுவான சட்டம் நிறைவேற்ற வேண்டும்: முத்தரசன் கோரிக்கை

முத்தரசன் | கோப்புப் படம்

சென்னை: சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க வலுவான சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், "கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகில் உள்ள அருணபதி கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி (50) அவரது மகன் சுபாஷ் (25) சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால், அவரையும், அவரது மருமகள் அனுசூயா ஆகியோரையும், தண்டபாணியின் தாயார் கண்ணம்மாள் (70) வீட்டுக்கு வஞ்சகமாக வரவழைத்து, அவர்களிடம் பாசம் காட்டி ஏமாற்றி, அவர்கள் அசந்து தூங்கும் நேரத்தில் வெட்டிப் படுகொலை செய்துள்ளார்.

தண்டபாணியின் கொலை வெறித் தாக்குதலை தடுத்த அவரது தாயாரையும் வெட்டியுள்ளார். இந்த சாதி வெறித் தாக்குதலில் கண்ணம்மாள், சுபாஷ் இருவரும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துவிட்டனர். மருமகள் அனுசூயா வெட்டுப்பட்ட படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார் என்கிற செய்தி மிகுந்த கவலையளிக்கிறது.

சாதி வேற்றுமைகள் களையவும், தீண்டாமை முறையை தடுக்கவும் சான்றோர்களும், சீர்திருத்த இயக்கத் தலைவர்களும் கடுமையாக போராடி, தமிழகத்தின் சமூக வாழ்வில் முன்னேற்றம் கண்டுள்ளனர். பகுத்தறிவுக்கு ஒவ்வாத சாதி, மதவெறி கருத்துக்களும், வெறுப்பு அரசியலும் பரப்பப்படுவதால் ஆணவப் படுகொலைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரியில் காதல் தம்பதிகள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து சாதி மறுத்து இல்லறம் ஏற்ற இளைஞர், 20 நாளில் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பது சட்டத்தின் ஆட்சிக்கு சவாலாகும். மூடப்பழக்க வழக்கங்களை அழித்து, அறிவியல் கண்ணோட்டம் வளர்க்கும் சமூக சீர்திருத்தப் பணிகளுடன், ஆணவப் படுகொலைகளை தடுக்கும் வலுவான தனி சட்டம் ஒன்றை தமிழக அரசு நடப்புக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x