Published : 16 Apr 2023 04:47 AM
Last Updated : 16 Apr 2023 04:47 AM

அதிமுக அவசர செயற்குழு இன்று கூடுகிறது - கர்நாடக தேர்தல் தொடர்பாக விவாதிக்க வாய்ப்பு

சென்னை: அதிமுக அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று கூடுகிறது. இதில் கர்நாடக தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவது, பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு கூடுதல் அதிகாரம் அளிப்பது தொடர்பாக விவாதிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்ற நிலையில், முதற்கட்டமாக கட்சி உறுப்பினர் சேர்க்கை மற்றும் பழையஉறுப்பினர்கள் பதிவை புதுப்பித்தல் பணிகளை கடந்த 5-ம் தேதிசென்னையில் தொடங்கிவைத்தார்.

இதற்கிடையில் கர்நாடக மாநிலசட்டப்பேரவை தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட கர்நாடக மாநில அதிமுகவினர் ஆர்வமாக உள்ளனர்.

இந்நிலையில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாகவும், கட்சி வளர்ச்சிப் பணிகள் தொடர்பாகவும் விவாதிப்பதற்காக அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு கூடுகிறது.

கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில், பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில் நடைபெறும் இக்கூட்டத்தில், கட்சி செயற்குழு உறுப்பினர்களான மாநில தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பிற மாநிலக் கழகச் செயலாளர்கள், கட்சி எம்பிக்கள், எம்எல்ஏக்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் (மகளிர்) என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். இவர்கள்அனைவருக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட் டுள்ளன.

இக்கூட்டத்தில் ஏற்கெனவே கர்நாடக மாநில தேர்தல் தொடர்பாக தம்பிதுரை எம்பி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோரை டெல்லியில் சந்தித்து பேசிய விவரம், கூட்டணி அமைத்து போட்டியிடுவதா, அம்மாநில பாஜக ஏற்காவிட்டால், தனித்து களம் காண்பது, பழனிசாமிக்கு கட்சியில் கூடுதல் அதிகாரம் வழங்குவது, கட்சியில் அதிக எண்ணிக்கையில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது, தேர்தல் ஆணையத்தில் கட்சியின் உச்சபட்ச பதவிஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என நீடிப்பதை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x