Published : 16 Apr 2023 05:29 AM
Last Updated : 16 Apr 2023 05:29 AM
சேலம்/கிருஷ்ணகிரி: மருத்துவக் கல்லூரி கட்டிட முறைகேடு தொடர்பான விவகாரத்தில், லஞ்ச ஒழிப்புத் துறை முதல்வர் ஸ்டாலினிடம்தான் முதலில் விசாரிக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கூறினார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் நேற்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பழனிசாமி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக போட்டியிடுவது குறித்து, செயற்குழுவில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். விரக்தியின் விளிம்பில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்துகளைப் பொருட்படுத்தத் தேவையில்லை.
சட்டப்பேரவைத் தேர்தலின்போது சசிகலா பொது வாழ்வில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதிமுக வெற்றி பெறாது என்று அவர் கருதினார். ஆனால், யாருடைய தயவுமின்றி அதிமுக 66 இடங்களைக் கைப்பற்றியது. தற்போது அதிமுக வலிமையான கட்சியாக இருப்பதால், கட்சியை ஒருங்கிணைக்கப் போவதாகப் பேசுகிறார்.
பாஜக தலைவர் ஆளுங்கட்சியினரின் சொத்துப் பட்டியலைத்தான் வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே ஆட்சியில் இருந்த கட்சியின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக அவர் கூறியுள்ளார். அதை வெளியிடும்போது பார்த்துக் கொள்ளலாம்.
அதிமுக ஆட்சியில், மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டிடப் பணிகள் 55 சதவீதம் முடிந்திருந்தன. மீதம் 45 சதவீத பணிகள் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டன. பணி நிறைவுச் சான்றிதழையும் திமுக அரசுதான் அளித்தது. முதல்வர் ஸ்டாலின்தான் தலைமை வகித்து, புதிய கட்டிடங்களைத் திறந்துவைத்தார்.
கூடுதல் கட்டிடம் கட்டவும் திமுக அரசுதான் அனுமதி அளித்தது. எனவே, மருத்துவக் கல்லூரி கட்டிட விவகாரத்தில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் முதலில் ஸ்டாலினிடம்தான் விசாரிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
அண்ணாமலையைப் பற்றி...: அப்போது, அவரிடம் அண்ணாமலை குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "அண்ணாமலை பேட்டி கொடுத்து, தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார். அவரைப்பற்றி என்னிடம் இனி கேட்காதீர்கள். முதிர்ந்த தலைவர்களைப் பற்றிக் கேளுங்கள். பதில் சொல்கிறேன்" என்றார்.
காவலர்களுக்கே பாதுகாப்பில்லை: தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில், இரு சமூகத்தினர் மோதிக் கொண்டனர். இதில் போலீஸார் காயமடைந்ததுடன், காவல் நிலையமும் தாக்கப்பட்டது. இது தொடர்பாக பழனிசாமி தனது ட்விட்டர் பதிவில், "பெரியகுளத்தில் பெண் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 10 போலீஸார் தாக்கப்பட்டுள்ளனர்.
திமுக ஆட்சியில், காவல் துறையினருக்கே பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்ததற்கு, இதுவே சாட்சி. இனியாவது இதுபோன்று தாக்குதல்கள் நடைபெறாமல் தடுத்து, அமைதியைக் காக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
கே.பி.முனுசாமி விமர்சனம்: அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, "திமுக அமைச்சர்கள் உள்ளிட்டோரின் சொத்துப் பட்டியலை பாஜக தலைவராக இருந்து அண்ணாமலை வெளியிட்டாரா அல்லது தனிப்பட்ட முறையில் வெளியிட்டாரா என்று விளக்க வேண்டும்.
இதேபோல, பாஜக ஆட்சியில் இல்லாத ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் பாஜக தலைவர்களும், ஆளுங்கட்சியினரின் சொத்து, ஊழல் பட்டியல்களை வெளியிடுவார்களா? ஊழலை எதிர்த்து பாதயாத்திரை மேற்கொள்வதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இவர் மட்டும்தான் ஊழலை ஒழிக்கப் பிறந்தவரா?" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT