Published : 16 Apr 2023 06:04 AM
Last Updated : 16 Apr 2023 06:04 AM
திருவள்ளூர்/தாம்பரம்/செங்கை: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவி தகுதி இழப்பு செய்யப்பட்டதை கண்டித்து ஆவடி ரயில் நிலையம், தாம்பரம், செங்கல்பட்டு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாகப் பேசியதாக குஜராத் பாஜக எம்எல்ஏ தொடர்ந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இதையடுத்து, அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டு அடுத்து வரும் 8ஆண்டுகளுக்கு ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட முடியாது என அறிவிக்கப்பட்டது.
இதற்கு நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திருவள்ளூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஜெயக்குமார் தலைமையில், மாவட்ட தலைவர் டி.ரமேஷ், ஏ.ஜி.சிதம்பரம், எம்எல்ஏ துரை சந்திரசேகர் முன்னிலையில், ஆவடி-இந்துக் கல்லூரி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயிலை மறித்து 500-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீஸார் அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர், மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த ரயில் மறியல் போராட்டத்தால் 15 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது.
செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினரும் மாநில பொருளாருமான ரூபி. ஆர். மனோகரன் தலைமையில் குரோம்பேட்டையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
அதேபோல் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் அதன் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஆர்.சுந்தரமூர்த்தி தலைமையில் செங்கல்பட்டில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர். இந்த ரயில் மறியல் போராட்டத்தால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் வி.ஆர்.சிவராமன், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், வட்டார, நகர, பேரூராட்சி, தலைவர்கள் நிர்வாகிகள் முன்னணி அமைப்புகள், துறைகள், பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT