Published : 16 Apr 2023 06:12 AM
Last Updated : 16 Apr 2023 06:12 AM

அதிமுகவினர் சொத்து பட்டியல் வெளியிட்டால் சந்திக்க தயார் - அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சவால்

சென்னை: அதிமுகவினர் சொத்து பட்டியலை பாஜக அண்ணாமலை வெளியிட்டால் அதை சந்திக்க தயார் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக சார்பில் கோடைக் காலத்தை முன்னிட்டு சென்னை திருவொற்றியூரில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தண்ணீர் பந்தலை திறந்துவைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஊழலை ஒழிப்பதற்காகவே தொடங்கப்பட்டது அதிமுக. பாஜக அண்ணாமலை வெளியிட்டிருப்பது திமுகவின் ரூ.1 லட்சத்து 34 ஆயிரம் கோடிக்கான சொத்துப் பட்டியல். அவர் வெளியிட்டது நல்ல விஷயம்தான்.

சொத்துகள் பறிமுதல்...: பட்டியலை வெளியிட்டதோடு நிற்காமல், சிபிஐக்கு அனுப்பி, அவர்களை சட்டத்தின் முன் நிற்க வைத்து, அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்து, அரசு கருவூலத்துக்கு கொண்டு வந்திருந்தால் சிறந்த பணியாக இருந்திருக்கும். மக்களின் பாதி கஷ்டம் தீர்ந்திருக்கும். நடப்பாண்டு பட்ஜெட் பற்றாக்குறையை முழுமையாக தீர்த்துவிட முடியும். ஆனால் அதை அண்ணாமலை செய்வாரா? அதை செய்ய வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

பிற கட்சியினரின் பட்டியலையும் வெளியிடுவேன் என்றுதான் அண்ணாமலை கூறினார். அதிமுகவின் பட்டியலை வெளியிடுவேன் என்று கூறவில்லை. எங்களுக்கு மடியில் கனம் இல்லை என்பதால், மத்திய முகமைகளான சிபிஐ,வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்றவை குறித்து எங்களுக்கு கவலை இல்லை. அண்ணாமலையை பார்த்து எங்களுக்கு எந்த பயமும் இல்லை.

அப்படி அதிமுக சொத்து பட்டியலை வெளியிட்டால், எல்லாவற்றையும் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். மறைமுக பூச்சாண்டி வேலைகள் எல்லாம் எங்களிடம் பலிக்காது. தைரியம் இருந்தால் எங்கள் கட்சி பெயரை சொல்லி பார்க்கட்டும்.

தேர்தலில் எங்கள் தலைமையில்தான் கூட்டணி இருக்கும். நாங்கள் கொடுக்கும் இடங்களைதான் கூட்டணி கட்சிகள் வாங்கிச் செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x