Published : 15 Apr 2023 10:35 PM
Last Updated : 15 Apr 2023 10:35 PM
மதுரை: தனி நீதிபதி உத்தரவை அமல்படுத்தாமல் மேல்முறையீடு மனு தாக்கல் செய்த தொழில்நுட்ப கல்வி ஆணையருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
நாகர்கோவிலைச் சேர்ந்த கனகராஜ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: பழவிளை காமராஜ் பாலிடெக்னிக்கில் 1982-ல் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தேன். 1989-ல் பணி நிரந்தரம் செய்யப்பட்டேன். எனக்கு 2006-ல் பதவி உயர்வு வழங்கப்பட்டது. எனது பதவி உயர்வை அங்கீகரிக்க தொழில்நுட்பக்கல்வி ஆணையருக்கு கல்லூரி நிர்வாகம் பரிந்துரை அனுப்பியது. ஆனால் அந்த பரிந்துரையை ஆணையர் நிராகரித்து உத்தரவிட்டார். அந்த உத்தரவை ரத்து செய்து எனக்கு பதவி உயர்வு மற்றும் பணப்பலன்கள் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை தனி நீதிபதி விசாரித்து, மனுதாரருக்கு 53 வயது ஆவதால், அவருக்கு தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தொழில்நுட்ப கல்வி ஆணையர் சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு பிறப்பித்த உத்தரவு: கல்லூரி ஆசிரியர்கள் பதவி உயர்வு வழக்கில் அதிகாரிகள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு எதிராக அரசு சார்பில் செய்யப்பட்ட மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த உத்தரவின் அடிப்படையிலேயே தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். அவர் வழக்கை வேறு கோணத்தில் அணுகவில்லை. இதனால் இந்த மேல்முறையீட்டு மனுவில் எந்த தகுதியும் இல்லை. எனவே அரசு தொழில்நுட்ப கல்வி இயக்குனரக ஆணையருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. அவர் அபராதத் தொகையை 15 நாளுக்குள் சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு செலுத்த வேண்டும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT