Published : 15 Apr 2023 11:01 AM
Last Updated : 15 Apr 2023 11:01 AM

கோடை காலத்தில் தடையின்றி சீரான மின் விநியோகம் செய்யப்படும்: அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி

பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூர்: கோடை காலத்தில் எந்தவித தடையுமின்றி சீரான மின் விநியோகம் செய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

கரூர் அருகேயுள்ள ஆண்டாங்கோவில் கிழக்கு, மேற்கு ஊராட்சிகள், கரூர் மாநகராட்சி பகுதிகளில் சாலை, வடிகால் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி இன்று (ஏப். 15ம் தேதி) தொடங்கி வைத்தார். அப்போது ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சியில் ரூ.10 லட்சத்தில் மயான கொட்டகை காத்திருப்போர் கூடம் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை தொடங்கி வைத்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழக மின் பயன்பாடு அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 40 கோடி யூனிட்டாக அதிகரித்துள்ளது. அது தடையின்றி பூர்த்தி செய்யப்பட்டது.

கோடை காலத்தில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கூடுதல் மின் தேவையை கணக்கிட்டு முன்னதாக வெளிச்சந்தையில் டெண்டர் மூலம் யூனிட் ரூ.8.50க்கு மின்சாரம் வாங்கப்பட்டது. தற்போது மத்திய மின் தொகுப்பில் (எக்ஸ்சேஞ்ச்) யூனிட் ரூ.12க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் அரசு ரூ.1,312 கோடியை சேமித்துள்ளது.

கோடை காலத்தில் எந்த விதமான தடையுமின்றி சீரான மின் விநியோகம் செய்யப்படுவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எனவே மின் தடை ஏற்படும் என்ற பயமோ, அச்சமோ பொதுமக்களுக்கு தேவையில்லை. மின் தேவையைவிட கூடுதலாக உபரி மின்சாரம் உள்ளது.

தமிழகத்தில் 50 மீட்டர் தொலைவுக்குள் இருப்பவை, வழிப்பாட்டு தலங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு அருகேயுள்ள 96 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன. இடமாற்றம் செய்யப்படும் கடைகளை புதிய கடை திறப்பு போல காண்பிக்கப்படுகின்றன. புதிய கடைகள் திறக்கப்படுவதில்லை. 596 கடைகள் மூடப்படுவது என்பது சாதாரணமானது அல்ல. மொத்த கடைகள் எண்ணிக்கையில் இது 11 சதவீதமாகும்.

நீலகிரி உள்ளிட்ட இரு மாவட்டங்களில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடைகள் சிறிய இடங்களில் செயல்படுவதால் அனைத்து மாவட்டங்களிலும் காலி மதுபாட்டில்களை வாங்குவது சாத்தியமல்ல. சோதனை முறையில் மேற்கண்ட மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கரூர் மாவட்டத்தில் சிப்காட்டுக்கு இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. அரவக்குறிச்சி அரசு கலைக்கல்லூரி, முருங்கை பூங்கா அமைப்பதற்கான இட தேர்வு பணிகள் 60 நாட்களில் முடிவடையும்" என்றார்.

அப்போது, ஆட்சியர் த.பிரபுசங்கர், மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன், எம்எல்ஏக்கள் அரவக்குறிச்சி இளங்கோ, கிருஷ்ணராயபுரம் க.சிவகாமசுந்தரி, கரூர் கோட்டாட்சியர் பா.ரூபினா, மண்மங்கலம் வட்டாட்சியர் குமரேசன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x