Published : 15 Apr 2023 04:22 AM
Last Updated : 15 Apr 2023 04:22 AM
சென்னை: திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறியது தொடர்பாக அண்ணாமலை மீது சட்டப்படி வழக்கு தொடரப்படும் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
திமுக தொடர்பான சொத்துப்பட்டியல் என்று சில விவரங்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டார்.
இதையடுத்து, திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி.க்கள் பி.வில்சன், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது: அண்ணாமலை எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டையும் ஆதாரத்துடன் தெரிவிக்கவில்லை. இப்படிப்பட்ட ஒருவரை எப்படி காவல் துறையில் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகம் வருகிறது.
அவர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ள அனைவருமே தேர்தலில் போட்டியிட்டவர்கள். தேர்தலில் போட்டியிடும்போது வேட்பாளர்கள் சொத்துக் கணக்கை தெரிவிக்க வேண்டும் என்பது கட்டாயம். முதல்வர் ஸ்டாலின், டி.ஆர்.பாலு, துரைமுருகன் உள்ளிட்ட எல்லோரும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். அதில் தெரிவிக்கப்பட்ட சொத்து தொடர்பாக விதிமீறல் இருந்தால், சாதாரண வாக்காளர்கூட தேர்தல் முடிவை எதிர்த்து வழக்கு தொடரலாம்.
அண்ணாமலை யார் யார் மீது குற்றம்சாட்டியுள்ளாரோ, அவர்கள் அண்ணாமலை மீது வழக்கு தொடருவார்கள். இனிமேல், பாஜகவுக்காக சுற்றுப்பயணம் செய்வதைவிட, நீதிமன்றங்களுக்கு அண்ணாமலை சுற்றுப்பயணம் செய்வதுதான் அதிகமாக இருக்கும்.
அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீது ஏதாவது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூற தைரியம் இருக்கிறதா என்று நான் கேட்கிறேன். ரபேல் கடிகாரம் தொடர்பாக, ரசீதுக்கு பதில் சீட்டு காட்டுகிறார். பணம் கட்டி வாங்கினால் பில் தருவார்கள். ஆனால், அவர் சீட்டைதான் காட்டினார்.
அவர் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்க வேண்டிய வருமான வரித் துறை, அமலாக்கத் துறை பிரதமர் மோடியின் கையில் உள்ளது. ஆக, அவர் எங்கள் மீது குற்றச்சாட்டு கூறுகிறாரா அல்லது, இந்த அமைப்புகளை வைத்துள்ள மோடி அல்லது நிர்மலா சீதாராமனை விமர்சிக்கிறாரா என்பது தெரியவில்லை.
திமுக இதுபோன்ற பல குற்றச்சாட்டுகளை சந்தித்துள்ளது. 6 முறை ஆட்சிக்கு வந்துள்ளது. ஒரு ஊழல் குற்றச்சாட்டையாவது, சொன்னவர்கள் நிரூபித்துள்ளார்களா? எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரால்கூட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை.
எம்ஜிஆர், ஜெயலலிதாவைவிட அண்ணாமலை ஒன்றும் அறிவுலக மேதையோ, ஆளுமைத்திறன் உள்ளவரோ இல்லை. ரூ.3,418 கோடி மதிப்பில் பள்ளிகள் உள்ளதாகவும் ரூ.34,184.71 கோடியில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இவற்றுக்கான ஆவணங்களை 15 நாட்களுக்குள் வெளியிட வேண்டும்.
ஏழை மக்கள் ஆருத்ரா நிறுவனத்தில் முதலீடு செய்துவிட்டு வயிற்றெரிச்சலுடன் கமலாலயத்துக்கு சென்று மறியல் செய்துள்ளனர். ஆருத்ரா மோசடி பணம் ரூ.2,000 கோடியில் ரூ.84 கோடியை அண்ணாமலையும், அவரது சகாக்களும் பெற்றுள்ளதாக பொதுமக்கள், கட்சியினர் கூறி வருகின்றனர். தேசிய அளவிலும், மாநில அளவிலும் உள்ள குற்றச்சாட்டுகளை திசைதிருப்ப, இன்று நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.
நாங்கள் குறிப்பான குற்றச்சாட்டுகளை தெரிவித்து, ஜெயலலிதா உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர்ந்தோம். அவற்றை நிரூபித்து, தண்டனையும் வாங்கிக் கொடுத்துள்ளோம். இன்று முதல்வர் ஸ்டாலின் தேசியத் தலைவர் ஆகியுள்ளார். அவரை களங்கப்படுத்த நினைத்தால் எண்ணம் ஈடேறாது.
சிபிஐ விசாரணைக்கெல்லாம் பயப்பட மாட்டோம். இதே சிபிஐ தானே ராசா மீது வழக்கு போட்டது. அந்த வழக்கை சந்தித்து வெற்றி பெற்றோம். நாங்கள் ஒன்றும் பழனிசாமியோ, வேலுமணியோ இல்லை. பட்டியல் வெளியிடுவதாக அவர்களையும் அண்ணாமலை பயமுறுத்துகிறார். எவ்வளவு ‘டீல்’ பேசுவார் என்பது தெரியவில்லை.
ஆருத்ரா வழக்கில் அண்ணாமலை நிச்சயமாக உள்ளே போகப் போகிறார். திமுக சொத்து தொடர்பாக, முதல்வர் அனுமதியுடன் வழக்கு தொடர்வேன். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT