Published : 15 Apr 2023 04:51 AM
Last Updated : 15 Apr 2023 04:51 AM
சென்னை: சட்டப்பேரவையில் நேற்று முன்தினம், வீட்டுவசதித் துறை மானியக் கோரிக்கையில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அறிவிப்புகளை வெளியிட்டு அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:
2030-ம் ஆண்டுக்குள் தமிழ கத்தை குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும், அனைவருக்கும் வீடு வழங்க வேண்டும் என்பதே முதல்வரின் தொலைநோக்குத் திட்டமாகும். இதை நிறைவேற்றத் தேவைப்படும் குடியிருப்புகள் 9 லட்சத்து 53 ஆயிரம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இதை நிறைவேற்றும் வகையில், அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டும் திட்டத்தின் கீழ் 40,259 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும், 85,184 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. 25,455 குடியிருப்புகள் கட்டும் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர், 42 திட்டப் பகுதிகளில் 16,173 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பயனாளிகள் தாமாக முன்வந்து வீடு கட்டும் திட்டத்தில் 2 லட்சத்து 78,400 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இரண்டு ஆண்டுகளில் 78,476 தனி வீடுகள் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் பேசினார்.
தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நில உரிமையுள்ள, நலிவடைந்த பயனாளிகளுக்கு தாமாகவே வீடுகட்டும் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து10 ஆயிரம் தனி வீடுகள் கட்டப்படும்.
நகர்ப்புறங்களில் வாழும் ஏழைக் குடும்பங்களுக்கு 30 ஆயிரம் அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஒதுக்கப்படும். பெரும்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்புத் திட்டப் பகுதியில், ரூ.7 கோடியில் சமுதாய நலக்கூடம் கட்டப்படும். மேலும், அப்பகுதியில் ரூ.4 கோடியில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும்.
மறுகுடியமர்வு செய்யப்பட்ட கண்ணகி நகர் திட்டப் பகுதியில் ரூ.4 கோடியில் நவீன நூலகம், நாவலூரில் ரூ.2.3 கோடியில் சமுதாய நலக்கூடம் ஆரம்பப் பள்ளியில் கூடுதல் தளம் கட்டப்படும்.
தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் மற்றும் சிஎம்டிஏ பகுதியில் தொடர்ந்து 10 ஆண்டுகள்வசித்து வரும் குடும்பங்களுக்கு விற்பனைப் பத்திரம் வழங்கப்படும்.
வாரியக் குடியிருப்புகளில் இளைஞர்களின் திறன்களை ஊக்குவித்து, அவர்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்த இளைஞர்மன்றங்கள் அமைக்கப்படும். மேலும், 12 ஆயிரம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்து, வேலைவாய்ப்பு பெற ஊக்குவிக்கப்படும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT