Published : 15 Apr 2023 05:21 AM
Last Updated : 15 Apr 2023 05:21 AM

பஞ்சாப் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர்களின் உடல்களுக்கு கண்ணீர் அஞ்சலி

யோகேஷ்குமாரின் உடல் மீது போர்த்தப்பட்ட தேசியக் கொடியை பெற்றுக் கொண்ட அவரது குடும்பத்தினர்.

மேட்டூர்/போடி: பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராணுவ முகாமில் உயிரிழந்த தமிழக வீரர்களின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, அரசு மரியாதை வழங்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராணுவ முகாமில் கடந்த 12-ம் தேதி நடந்த துப்பாக்கிச் சூட்டில், சேலம் மாவட்டம் மேட்டூர் வனவாசி அருகே உள்ள பனங்காட்டை சேர்ந்த கமலேஷ், தேனி மாவட்டத்தை சேர்ந்த யோகேஷ்குமார் உள்பட 4 வீரர்கள் உயிரிழந்தனர். கமலேஷின் உடல் விமானம் மூலமாக கோயம்புத்தூருக்கு நேற்று கொண்டுவரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு ராணுவ அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸில் சொந்த ஊரான வனவாசிக்கு மதியம் ஒரு மணிக்கு உடல் கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், அவரது உடலுக்கு அரசு மரியாதை வழங்கக் கோரி, உடல் எடுத்து வரப்பட்ட ஆம்புலன்ஸ் முன்பாக மேச்சேரி - வனவாசி பிரதான சாலையில் கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தைக்கு பிறகு, ராணுவ வாகனத்தில் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது, பொதுமக்கள் மலர்களை தூவி மரியாதை செலுத்தினர். கமலேஷின் உடலில் இருந்த தேசியக் கொடி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், அருகில் உள்ள மயானத்தில் கமலேஷின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கார்மேகத்திடம் கேட்டபோது, ‘போர்க்களத்தில் உயிரிழந்தால் மட்டுமே அரசு மரியாதை வழங்கப்படும். தற்போது, அவர் உயிரிழப்பு, சந்தேகம் மரணம் என ராணுவம் தெரிவித்துள்ளதால் அரசு மரியாதை வழங்கவில்லை. ஆனால், பணியில் இருக்கும்போது உயிரிழந்துள்ளதால் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு உண்டு’ என்றார்.

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள மூனாண்டிபட்டியைச் சேர்ந்த ராணுவ வீரரான யோகேஷ்குமாரின் (24) உடல் புதுடெல்லியில் இருந்து நேற்று விமானம் மூலம் மதுரை கொண்டு வரப்பட்டு பிறகு வாகனம் மூலம் சொந்தஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஊர் எல்லையில் இருந்து அவரது வீட்டுக்கு உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஊர்வலமாகச் சென்றனர். அங்கு அவரது உடலுக்கு திமுக தேனி (தெற்கு) மாவட்டச் செயலாளர் கம்பம் என்.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், யோகேஷ் குமார் உடலுக்கு ராணுவ மரியாதை வழங்கப்படாததைக் கண்டித்து, அப்பகுதியில் மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர், யோகேஷ் குமார் உடல் ரங்கநாதபுரம் மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. எஸ்.பி. பிரவீன் உமேஷ் டோங்கரே மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார். யோகேஷ் குமார் உடலில் போர்த்தப்பட்ட தேசியக்கொடி அவரது தந்தை ஜெயராஜிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து யோகேஷ் குமார் உடல் தகனம் செய்யப்பட்டது.

எஸ்.பி. பிரவீன் உமேஷ் டோங்கரே கூறும்போது, ‘ராணுவ மரியாதை குறித்து அந்தந்த முகாம் தலைமை அலுவலகத்தில் இருந்து தகவல் தருவது வழக்கம். ஆனால், இந்த முறை அப்படி தகவல் ஏதும் வரவில்லை’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x