Last Updated : 15 Apr, 2023 02:29 PM

1  

Published : 15 Apr 2023 02:29 PM
Last Updated : 15 Apr 2023 02:29 PM

அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி நிரந்தரமின்றி தவிக்கும் 2,500 பல்நோக்கு பணியாளர்கள்

சிவகங்கை: தமிழகத்தில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2,500 பல்நோக்குப் பணியாளர்கள் பணி நிரந்தரமின்றி தவித்து வருகின்றனர்.

அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், அறுவை அரங்கு உதவியாளர், செவிலிய உதவியாளர் உள்ளிட்ட நிரந்தரப் பணியிடங்கள் இருந்தன.

2013-ம் ஆண்டு முதல் இப்பணியிடங்களில் தினக்கூலி அடிப்படையில் பல்நோக்குப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும் 5 ஆண்டுகள் பணிபுரிவோர் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டது. இப்பணியிடங்களில் தற்போது 2,500 பல்நோக்கு பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

மேலும் அவர்களைப் பணி நிரந்தரம் செய்தவற்கான கோப்பு 2018-ம் ஆண்டு முதல் கிடப்பில் உள்ளது. 2019-ம் ஆண்டு சட்டப்பேரவையில் அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பல்நோக்கு பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவர் என தெரிவித்தார். ஆனால், அதன்பிறகும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இதனால் பணியாளர்கள் சிரமமடைந்து வருகின்றனர்.

இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் ப.குமார் கூறியதாவது: பல்நோக்குப் பணியாளர்கள் 10 ஆண்டுகளாக தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் பணிபுரியும் பணியிடங்கள் ஏற்கெனவே அரசால் அனுமதிக்கப்பட்ட நிரந்தரப் பணியிடங்கள்தான். 2020-ம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பணி நிரந்தரம் செய்வோம் என்று கூறினார்.

2022-ம் ஆண்டு நடந்த போராட்டத்தின்போதும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் பணி நிரந்தரம் செய்வதாக உறுதியளித்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லாததால் பணியாளர்கள் சிரமத்தில் உள்ளனர். இதையடுத்து ஏப்.17-ம் தேதி பல்நோக்கு பணியாளர்கள் சென்னையில் உண்ணாவிரதம் இருக்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x