Published : 14 Apr 2023 08:28 PM
Last Updated : 14 Apr 2023 08:28 PM

அண்ணாமலை கூறும் குற்றச்சாட்டுகள் அடிப்படை முகாந்திரம் இல்லாதவை: அமைச்சர் செந்தில் பாலாஜி 

அமைச்சர் செந்தில் பாலாஜி | கோப்புப்படம்

கோவை: "நண்பர் ஒருவர் ஒரு நாள் உதவலாம், ஒரு வாரம் உதவலாம், ஒரு மாதம் உதவலாம். வருடக்கணக்கில் யாராவது உதவி செய்வார்களா?" என்று அண்ணாமலை குற்றச்சாட்டிற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலளித்துள்ளார்.

கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ''தனக்கு சாப்பாடு ஒருவர் கொடுக்கிறார், வாடகை ஒருவர் கொடுக்கிறார், டீசல் ஒருவர் கொடுக்கிறார், கார் ஓட்டுநருக்கு சம்பளம் ஒருவர் கொடுக்கிறார் என்று அண்ணாமலை கூறுகிறார். அவர் குடியிருக்கும் வீட்டின் வாடகை எவ்வளவு தெரியுமா? ஒரு மாத வாடகை மூன்றே முக்கால் லட்சம். நண்பர் ஒருவர் ஒரு நாள் உதவலாம், ஒரு வாரம் உதவலாம், ஒரு மாதம் உதவலாம். வருடக்கணக்கில் யாராவது உதவி செய்வார்களா? அப்படி யாராவது இருந்தால் சொல்லுங்கள் பார்ப்போம்.

நான் தேர்தலில் போட்டியிட்டால், எனக்காக நண்பர்கள், உறவினர்கள் யார் செலவு செய்தாலும் அது என்னுடைய கணக்கில்தான் வரும் என்பது தேர்தல் ஆணையத்தின் உத்தரவு. ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருந்துகொண்டு என்னுடைய செலவுகளை எல்லாம் யாரோ செய்கிறார்கள் என்றால், அது எங்கே வார் ரூமில் இருந்து வருகிறதா? வார் ரூமில் இருந்து வரும் வசூல்தான் நண்பரா?

அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ள எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் தேர்தல் நேரத்தில், வேட்புமனுவில் தங்களது குடும்ப சொத்துகள் உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டுள்ளனர். நிருபர்கள் யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்று கூறும் அண்ணாமலை, அவர் சொல்ல வருவதை ஒரு வீடியோவாக பதிவு செய்து, அனைத்து ஊடக அலுவலகங்களுக்கும் அனுப்பினால் ஊடகவியலாளர்கள் எடுத்துக்கொள்ள போகின்றனர்.

வாட்ச் வாங்கியதாக ஒருவர் பெயரை சொல்கிறார். அவர் வாங்கியது 4.50 லட்சம். அந்த நபர் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கழித்து அண்ணாமலைக்கு 3 லட்சத்துக்கு விற்பனை செய்கிறார். கிடைப்பதற்கு அரிதான ஒரு பொருள் காலங்கள் செல்ல செல்ல அதன் மதிப்பு அதிகமாகும். அப்படியிருக்கும்போது எப்படி இரண்டு மாதத்துக்குள் இவருக்கு விலை குறைத்து கொடுக்கப்பட்டிருக்கும். அதுமட்டுமல்ல, அந்த வாட்ச் பற்றி சொல்லும்போது ஒரு இடத்தில் 147 என்கிறார், ஒரு இடத்தில் 149 என்கிறார்.

அதாவது ஒரு பொய்யை மறைப்பதற்கு, ஒரு வெகுமதியை மறைப்பதற்கு தான் வாங்கிய ஒரு லஞ்சத்தை மறைப்பதற்கு நூறு பொய், ஆயிரம் பொய்யை சொல்ல ஆரம்பித்துவிட்டார். வாட்ச் பரிசு பொருளாக கிடைத்தது என்று கூறுவதில் அண்ணாமலைக்கு என்ன வெட்கம். தேசிய கட்சியில் இருக்கிற ஒரே காரணத்திற்காக, எந்தவித அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் குற்றம் சாட்டுகிறார்" என்று செந்தில்பாலாஜி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x