Published : 14 Apr 2023 06:01 PM
Last Updated : 14 Apr 2023 06:01 PM
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் பட்டு சேலைகள் ரூ.5 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
பிரம்மாண்ட கட்டிடக் கலையும், பழமையும் பெற்ற உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஆண்டு முழுவதும் லட்சக் கணக்கான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். மதுரை மீனாட்சி அம்மனுக்கும் சுந்தரேஸ்வரருக்கும் தினமும் பொதுமக்கள் சார்பாகவும் கோவில் நிர்வாகம் சார்பாகவும் பட்டு சேலைகள், வேஷ்டிகள், துண்டுகள் சாற்றப்படுகின்றன.
இவ்வாறு சாற்றப்படும் வேட்டி, சேலை, துண்டுகள், நிர்வாகத்தின் சார்பில் வாரம் ஒரு முறை கோவில் வளாகத்தில் வைத்து ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பட்டு சேலைகள் விற்பனை மூலம் கிடைத்துள்ள விவரம் குறித்து மதுரையை சேர்ந்த மருதுபாண்டி என்பவர் கேட்ட கேள்விக்கு கோவில் நிர்வாகம் தகவல் வழங்கியிருக்கிறது.
கடந்த 2020 முதல் 2022ம் ஆண்டு வரை சுமார் மூன்று ஆண்டுகளில் மட்டும் ரூ.5 கோடியே 45 லட்சத்து 64 ஆயிரத்து 586-க்கு விற்பனை நடந்துள்ளதாகவும், இதன் மூலம் கிடைத்த வருமானம் கோவிலின் வங்கி கணக்கில் இருப்பு வைக்கப்படும் என கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 2020 - 2022ம் ஆண்டு காலக்கட்டத்தில் கரோனா தொற்று பரவியதால் கோவிலுக்கு பக்தர்கள் வருகை குறைந்தது.
சித்திரைத் திருவிழா 2 ஆண்டுகள் தடைப்பட்டது. தற்பாது சித்திரைத் திருவிழா முதல் அன்றாட திருவிழாக்கள் மீனாட்சியம்மன் கோயிலில் களைக் கட்டியுள்ளது. தினமும் பக்தர்கள் வருகையும் தற்போது கூடியுள்ளது. கோவிலில் திருமணங்களும் அதிகரித்துள்ளன. அதனால், இனி வரும் காலக் கட்டத்தில் மீனாட்சியம்மன் கோவில் பட்டு சேலைகள், வேஷ்டிகள், துண்டுகள் இன்னும் கூடுதல் தொகைக்கு ஏலம் போகும் வாய்ப்புள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT