Published : 14 Apr 2023 11:07 AM
Last Updated : 14 Apr 2023 11:07 AM
சென்னை: திமுகவின் சொத்து மதிப்பு ரூ.1.31 லட்சம் கோடி என்று பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
திமுக ஆட்சி அமைந்த பிறகு பாஜக - திமுக இடையேயான கருத்து மோதல் அதிகரித்துள்ளது. தமிழக அரசின் பல துறைகள் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை அண்ணாமலை முன்வைத்து வந்தார். இந்நிலையில், அண்ணாமலையின் வாட்ச் விவகாரம் சூடு பிடிக்க தொடங்கியது. அண்ணாமலை கையில் கட்டியிருப்பது வெளிநாட்டு வாட்ச் என்றும், அது பல லட்சம் மதிப்புடையது என்றும் திமுகவினர் விமர்சித்தனர். ஆனால், அது வெளிநாட்டு வாட்ச் அல்ல, ரஃபேல் விமானத்தின் உதிரி பாகங்களால் தயாரிக்கப்பட்ட வாட்ச் என அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து, இந்த வாட்ச் வாங்கியதற்கான ரசீதை அண்ணாமலை வெளியிட வேண்டும் என திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார். அதற்கு, வாட்ச் வாங்கியதற்கான ரசீது தன்னிடம் இருப்பதாகவும், அதை விரைவில் வெளியிடுவதாகவும் அண்ணாமலை கூறினார். அதோடு, ஏப்ரல் 14-ம் தேதி திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று அண்ணாமலை தெரிவித்தார். திமுகவின் இந்த ஆட்சி மட்டுமல்லாமல், கடந்த திமுக ஆட்சியிலும் நடைபெற்ற ஊழல்களையும் வெளியிட இருப்பதாக கூறினார்.
இதனைத் தொடர்ந்து இன்று சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் திமுகவின் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "மாநிலத் தலைவர் ஆன பிறகு மாதம் ரூ.8 லட்சம் ரூபாய் செலவு ஆகிறது. எனது வீட்டு வாடகை, உதவியாளர்களுக்கான ஊதியத்தை நண்பர்கள் தான் தருகிறார்கள். காருக்கு கட்சி தான் பெட்ரோல் போடுகிறது.
காவல் பணியில் இருந்த போது லஞ்சப்பணத்தில் ரஃபேல் வாட்ச் வாங்கியதாக திமுகவினர் தகவல் பரப்பினர். ரஃபேல் வாட்ச் வரிசையில் 147-வது வாட்சை நான் வாங்கினேன். 3 லட்சத்திற்கு இந்த வாட்சை நான் வாங்கினேன். சேரலாதன் ராமகிருஷ்ணன் என்ற நண்பரிடம் இருந்து ரஃபேல் வாட்சை வாங்கினேன். 2021ம் ஆண்டு இந்த வாட்சை வாங்கிய அவர், மே மாதம் என்னிடம் கொடுத்தார்" என்று தெரிவித்தார். மேலும் ரஃபேல் வாட்ச் பில்லை வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து, திமுக எம்.பி ஜெகத்ரட்சகன், அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, திமுக எம்.பி கனிமொழி கருணாநிதி, கலாநிதி மாறன், டி ஆர்.பாலு, அமைச்சர் துரைமுருகன், வடசென்னை எம்.பி கலாநிதி வீராசாமி, அமைச்சர் பொன்முடி, அமைச்சர் அன்பில் மகேஸ், முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன் ஆகியோரின் சொத்து பட்டியல் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் சொத்து பட்டியல் தொடர்பான விவரங்கள் அடங்கிய வீடியோவை அண்ணாமலை வெளியிட்டார். இதன்படி திமுகவின் சொத்து மதிப்பு ரூ.1.31 லட்சம் கோடி என்று அண்ணாமலை தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...