Published : 14 Apr 2023 04:30 AM
Last Updated : 14 Apr 2023 04:30 AM
சென்னை: சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில், செங்கல் உற்பத்தி செய்யத் தேவையான மண் எடுக்க அரசு அனுமதி அளிப்பது தொடர்பாக, அதிமுக, திமுக, காங்கிரஸ், மதிமுக உறுப்பினர்கள் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தனர்.
அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம் பேசும்போது, ‘‘மூன்று வகையில் மண் எடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மண் எடுப்பதில் பல்வேறு சிக்கல்கள் நீடிக்கின்றன. மாவட்ட ஆட்சியரிடம் இருந்து அனுமதி பெறவேண்டியுள்ளது. இதை மாற்றி,சுரங்கத் துறை கூடுதல் இயக்குநரேஅனுமதிக்கும் வகையில் நடைமுறைகளை திருத்தியமைக்க வேண்டும்’’ என்றார். திமுக உறுப்பினர் தளபதி, காங்கிரஸ் உறுப்பினர் ரூபி ஆர்.மனோகரன் ஆகியோரும் மண் எடுக்க அனுமதிப்பது குறித்து கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: இது பல்லாயிரக்கணக்கானோ ரின் வாழ்க்கைப் பிரச்சினை. நெல்லை மாவட்டத்தில் முதல்வர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, செங்கல் சூளை, மண்பாண்டத் தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோர் மண் கிடைக்கவில்லை என்றனர். அப்போது முதல்வர், நாங்கள் ஆட்சிக்கு வந்தால், எளிதாக மண் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக செங்கல் சூளை, மண்பாண்டத் தொழிலாளர்களிடம் நான் ஆலோசித்தேன். இதனடிப்படையில், செங்கல் சூளைக்கு 3 வகைகளில் மண் எடுக்கலாம் என்று தெரிவித்தோம்.
சிறு கனிம சலுகை விதிகள்படி, பட்டா நிலத்தில் மண் எடுக்க சுரங்கத் துறை கூடுதல் இயக்குநரிடம் விண்ணப்பிக்க வேண்டும். சுரங்கத் திட்டம் தயாரிக்க வேண்டும். அந்த மண்ணில், மணல், கிராவல் இல்லை என்பதற்கான சான்றிதழ் தரவேண்டும். சுரங்கத் துறை கூடுதல் இயக்குநர் அனுமதி வழங்கினால், 3 ஆண்டுக்கு மண் எடுக்கலாம்.
அதேபோல, விதி 44-ன்படி,பட்டா நிலங்களில் மண் எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். சுரங்கத் துறை கூடுதல் இயக்குநர், வேளாண் துறை இணை இயக்குநரிடம் தடையின்மைச் சான்றிதழ்கள் வாங்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கினால் 1.5 மீட்டர் அளவுக்கு மண் எடுக்கலாம்.
மூன்றாவதாக, அரசுக்குச் சொந்தமான ஏரி, குளங்களில் இருந்து, மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன் மண் எடுக்கலாம். உரிமக் கட்டணம், கனிம கட்டணம் செலுத்த வேண்டும்.
கோவை தடாகம் பகுதியில், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் பசுமைத் தீர்ப்பாய வழக்குகள் காரணமாக, 2020-2023 வரை செங்கல் சூளைகள் இயங்கவில்லை. எனவே, அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து செங்கல் வரவழைக்கப்பட்டதால், செங்கல் விலை ரூ.6-லிருந்து 13 வரை உயர்ந்தது. தற்போது பசுமைத்தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளதால், செங்கல் விலை குறையும்.
மண்பாண்டத் தொழிலாளர்கள், மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று, அரசு, புறம்போக்கு நிலத்தில் 800 மாட்டு வண்டிகள்வரை இலவசமாக மண் எடுக்கலாம். இதுதவிர, நிலங்களை சீர்திருத்தம் செய்யும்போது கிடைக்கும் உபரி மண்ணையும், உரிய தொகை செலுத்திஎடுத்துக் கொள்ளலாம்.
இதில் பிரச்சினை என்பது, மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறுவதில் உள்ளது. மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிக பணிகள் உள்ளன. சுரங்கத் துறை கூடுதல் இயக்குநர் ஒப்புதல் அளித்தாலும், அந்த கோப்பு மாவட்ட ஆட்சியரிடம் மாதக் கணக்கில் தங்கிவிடுகிறது.
எனவே, இது தொடர்பாக முதல்வரிடம் தெரிவித்து, மாவட்ட ஆட்சியருக்குப் பதில், சுரங்கத் துறை கூடுதல் இயக்குநரே அனுமதி அளிக்கும் நடைமுறை கொண்டு வரப் படும். இவ்வாறு அமைச்சர் துரை முருகன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT