Published : 14 Apr 2023 04:51 AM
Last Updated : 14 Apr 2023 04:51 AM

சென்னை குறளகம் வளாகத்தில் ரூ.100 கோடியில் நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம்: அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். அதற்கு துறையின் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பதிலளித்துப் பேசிய பிறகு வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு:

பிசி, எம்பிசி, சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் விடுதிகளில் தங்கிப் படிக்கும் 10.ம் வகுப்பு, பிளஸ்-2 மாணவர்களுக்கு ரூ.25 லட்சம் செலவில் வினா வங்கி புத்தகம் வழங்கப்படும். இவ்விடுதிகளில் தூய்மைப் பணியாளர்களுக்காகவும், சுகாதாரத்தை மேம்படுத்தவும் ரூ.5 கோடிவழங்கப்படும்.

ரூ.16 கோடியே 13 லட்சம் செலவில் பிசி, எம்பிசி, சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் விடுதிகளுக்கு சொந்தக் கட்டிடம் கட்டப்படும். மேலும், விடுதி சிறப்பு பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகளுக்கு ரூ.20 கோடி வழங்கப்படும்.

திண்டுக்கல் மாவட்டம் கொண்டமநாயக்கன்பட்டியில் ரூ.50 லட்சம் செலவில் ஓர் உண்டு உறைவிடப்பள்ளி தொடங்கப்படும்.

கதர் கிராம தொழில்கள் துறை: சென்னை எஸ்பிளனேடு பகுதியில் அமைந்துள்ள குறளக கட்டிடத்தை இடித்துவிட்டு அங்கு நவீன வசதிகளுடன் ரூ.100 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்படும்.

திருச்சிராப்பள்ளி ரயில்வே சந்திப்புக்கு எதிரில், கதர் வாரியத்தின் உதவி இயக்குநர் மற்றும் மண்டலதுணை இயக்குநர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. வியாபாரம் நிறைந்த, பொருளாதார மதிப்பு கொண்ட இடத்தில் உள்ளஇந்தக் கட்டிடம் 1966-ல் கட்டப்பட்டது. தற்போது பழுதடைந்த நிலையில் உள்ளது. எனவே இக்கட்டிடத்தை இடித்து, அனைத்து நவீனவசதிகளுடன் கூடிய ஒரு எழில்மிகுவர்த்தகக் கட்டிடம் ரூ.5.60 கோடியில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

மார்த்தாண்டம் பகுதியில் கொள்முதல் செய்யப்படும் பச்சைத் தேனின் விலை கிலோவுக்கு ரூ.140-லிருந்து ரூ.155 ஆக உயர்த்தி வழங்கப்படும். திருப்பூர் கதர் வளாகத்தில் ரூ.15 லட்சம் செலவில் புதிய தேன் பதப்படுத்தும் நிலையம் நிறுவப்படும்.

வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் 3 கதர் அங்காடிகள்ரூ.23 லட்சத்தில் புதுப்பிக்கப்படும். பட்டு நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள 40 பட்டு விவசாயிகளுக்கு ரூ.10 லட்சம் செலவில் புதிய தறிகள் வழங்கப்படும். மேலும், 100பட்டு நெசவாளர்களுக்கு ரூ.8 லட்சம் செலவில் தறி உபகரணங்கள் வழங்கப்படும்.சிறந்த கதர் நூற்பாளர், சிறந்த கதர் நெசவாளர் மற்றும் சிறந்த பட்டு நெசவாளர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும்.

பனை பொருள் வளர்ச்சி வாரியம்: ராமநாதபுரம் - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் ரூ.5 கோடியில் பனைப் பொருள் வர்த்தக மையம் அமைக்கப்படும்.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணத்தில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் பனைவெல்ல கிடங்கு மற்றும் பனை ஓலை தொழிற்கூடம் அமைக்கப்படும். இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x