Published : 14 Apr 2023 06:10 AM
Last Updated : 14 Apr 2023 06:10 AM
சென்னை: மூன்று பெரும் ஒவியர்களுக்கு சென்னையில் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. ஏப். 12-ம் தொடங்கி 11 நாட்களுக்கு நடைபெறும் இவ்விழாவில் ஓவியக் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
‘ஓவிய மன்னர்’ கே.மாதவன், ‘ராஜபாட்டை’ ஆர்.மாதவன், ஆர்.நடராஜன் ஆகிய மூன்று முதுபெரும் ஓவியர்களுக்கு சென்னையில் நூற்றாண்டு விழா நடந்து வருகிறது.
ஏப்.12-ம் தேதி தொடங்கி 23-ம் தேதிவரை 11 நாள் நடைபெறும் இவ்விழாவின் ஒரு பகுதியாக பிரம்மாண்ட ஓவியக் கண்காட்சி, பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டிகள், இலவச ஓவியப்பயிற்சிப் பட்டறைகள் ஆகியன நடத்தப்பட்டு வருகின்றன.
ஓவியர் கே.மாதவன் நற்பணி சங்கம் முன்னெடுத்துள்ள இவ்விழா, ஏப். 12-ம் தேதி சென்னை அம்பத்தூரில் உள்ள ‘டாட் ஸ்கூல் ஆஃப் டிசைன்’ ஓவியப் பள்ளி வளாகத்தில் தொடங்கியது.
நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் பேசியதாவது: சினிமாவில் ‘பேனர் ஆர்ட்’ என்ற பிரம்மாண்டக கலையைக் கண்டுபிடித்தவர் ‘ஓவிய மன்னர்’ கே.மாதவன். அவரது ஓவியங்கள் தலைமுறைகள் கடந்து நிற்பவை. அவரைப் பின் தொடர்ந்து வந்த ஓவியர் ஆர்.மாதவன் ‘ஓவிய ராஜபாட்டை’ என்று பெயரெடுக்கும் அளவுக்குப் பிரபலமானவர். அவருடைய சகோதரர் ஆர்.நடராஜன் எனது மானசீக குரு. அவர்கள் செய்த சாதனைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை’’ என்றார்.
இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ள ஓவியர் கே.மாதவன் நற்பணி சங்கத்தின் செயலாளர் எஸ். ராமேஷ் இந்து தமிழ் செய்தியாளரிடம் கூறும்போது, “ இவர்களைப் போன்ற மூத்த ஓவியர்களைப் பற்றி அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லி, அவர்களது படைப்புகளைத் திரட்டி வந்து ஓவியக் காட்சியாக வைத்து இக்கலையை வளர்க்கும் நோக்கத்துடன் முதல் விழாவை முன்னெடுத்துள்ளோம்.
இது தொடரும்” என்றார். இந்நிகழ்ச்சியில் ஓவியர்கள் டிராட்ஸ்கி மருது, ஜெயராஜ், ராமு, மாருதி, மணியம் செல்வன், ஷியாம், நடிகர் பொன்வண்ணன், தொழிலதிபர் யு. கருணாகரன், டாட் ஸ்கூல் ஆப் டிசைன் நிறுவனர் ஆர். ராம்நாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT