Published : 14 Apr 2023 05:36 AM
Last Updated : 14 Apr 2023 05:36 AM
சென்னை: மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து குறிப்பிட்ட இடத்துக்கு பெண்கள் அச்சமின்றி செல்லும் வகையில், நந்தனம் உள்ளிட்ட 6 மெட்ரோ ரயில் நிலையங்களில் பெண்களே இயக்கும் இணைப்பு வாகன சேவை தொடங்கப்பட்டுள்ளது.
மெட்ரோ பெண் பயணிகள் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ரேபிடோ நிறுவனம் ஆகியவை இணைந்து, பெண்கள் மட்டுமே இயக்கும் ரேபிடோ பைக் இணைப்பு வாகன சேவை சென்னை நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த சேவையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி நேற்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:
மெட்ரோ ரயில் பெண் பயணிகளுக்குப் பாதுகாப்பான மற்றும் நம்பகமான இணைப்பு வாகன சேவையை வழங்குவது முக்கிய நோக்கமாகும். இதற்காக பெண்களால் இயக்கப்படும் பைக் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மொத்தம் 50 பைக்களின் சேவை நந்தனம்மெட்ரோ ரயில் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த பைக் சேவை ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, எழும்பூர், சைதாப்பேட்டை மற்றும் அரசினர் தோட்டம் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களிலும் கிடைக்கும். தேவை மற்றும் சேவையின் அடிப்படையில் பின்னர் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் விரிவுபடுத்த ஆலோசிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்கப் பிரிவு கூடுதல் பொது மேலாளர் எஸ்.சதீஷ்பிரபு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் ரேபிடோ பைக் நிறுவன அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT