Published : 14 Apr 2023 05:57 AM
Last Updated : 14 Apr 2023 05:57 AM
சென்னை: தமிழ்நாடு மற்றும் ஒடிசா மாநில மனித உரிமை ஆணையங்கள் இணைந்து, தமிழ்நாடு மாநில அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, ஒடிசா மாநில அரசின் தொழிலாளர் துறை இடையிலான புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி, சென்னை ராஜா அண்ணாமலைபுரம், பசுமை வழிச்சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் (ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி) எஸ்.பாஸ்கரன், ஒடிசா மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் (ஓய்வு பெற்ற நீதிபதி) சத்ருஹன புஜாரி, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்கள் ராஜ இளங்கோ, கண்ணதாசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
மேலும், இந்நிகழ்ச்சியில் ஒடிசா மாநில அரசின் தொழிலாளர் துறை ஆணையர் மற்றும் செயலாளர் சந்தான கோபாலன், ஒடிசா மாநில அரசின் தொழிலாளர் துறை ஆணையர் டாக்டர் திருமலா நாயக், ஒடிசா மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் புலனாய்வுத் துறை இயக்குநர் மற்றும் காவல் துறை சிறப்பு இயக்குநர் பிரனபிந்து ஆச்சார்யா, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் புலனாய்வுத் துறை இயக்குநர் மற்றும் காவல் துறை தலைவர் டாக்டர் மகேந்தர் குமார் ரத்தோட், காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் எஸ்.பாஸ்கரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு, ஒடிசா மாநில அரசுகள்இணைந்து இரு மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட உள்ளது.
இதுகுறித்த கருத்துரு இரு மாநிலஅரசுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் ஒப்புதல் பெற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும். இதன் மூலம், இரு மாநில தொழிலாளர்கள் பலனடைவார்கள். குறிப்பாக ஒடிசா மற்றும் தமிழக தொழிலாளர்களுக்கு பணிப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றார்.
கலாஷேத்ரா பாலியல் விவகாரம் மற்றும் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி, விசாரணை கைதிகளின் பற்களைப் பிடுங்கிய விவகாரம் தொடர்பாகச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “இவ்விரு விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 6 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்பு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT