Published : 14 Apr 2023 05:52 AM
Last Updated : 14 Apr 2023 05:52 AM

எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் மகளுக்கு தவறான சிகிச்சை - தலைமைச் செயலகம் அருகே காவலர் திடீர் தர்ணா

மகளுடன் தர்ணாவில் ஈடுபட்ட தலைமை காவலர் கோதண்டராமன்.

சென்னை: ஆவடி காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் கோதண்டராமன் (42). இவர் சென்னை, ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றுகிறார். இவரது மகள் பிரதிஷா (10). இவருக்கு 3 வயது இருக்கும்போது சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டதால், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பிரதிஷாவுக்கு மருத்துவர்கள் வழங்கிய மாத்திரைகளை அவரது பெற்றோர் கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் அவருக்கு வலது காலில் கடுமையான அரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர், மீண்டும் கடந்த 2021-ம் ஆண்டு சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிறுமிக்கு ரத்தம் உறைதல் ஏற்பட்டு, வலது காலும், இடது கையும் செயலிழந்தன. கோதண்டராமன், தனது குழந்தைக்கு இந்த நிலை ஏற்படக் காரணம் என்ன என்று மருத்துவர்களிடம் கேட்டாராம்.

ஆனால், யாரும் சரியான விளக்கம் அளிக்கவில்லையாம். இதையடுத்து அவர், மருத்துவர்களின் தவறான சிகிச்சையால்தான் தனது மகளுக்கு இந்த நிலை ஏற்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல் துறையினரிடமும், சுகாதாரத் துறையினரிடமும் புகார் அளித்தார். ஆனால் அவரது மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால், வேதனை அடைந்த கோதண்டராமன் தலைமைச் செயலகத்துக்கு தனது மகள் பிரதிஷாவுடன் நேற்று வந்து திடீரென ராஜாஜி சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். போலீஸார் கோதண்டராமனிடம்சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதைஅடுத்து அவர் போராட்டத்தைக் கைவிட்டார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரைத்த மாத்திரைகளை மட்டுமே எனது மகளுக்கு வழங்கினோம். என் மகள் 5 ஆண்டுகளாக மாத்திரைகளைச் சாப்பிட்டு வந்தார். அதனால் தற்போது எனது மகளின் வலது கால், இடது கை செயல் இழந்துவிட்டன. தவறான சிகிச்சையால்தான், என் மகள் வாழ்க்கை இப்படியாகிவிட்டது.

எனவே இது தொடர்பாக, சம்பந்தப்பட்டவர்கள் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கண்ணீர் மல்க கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x