Published : 13 Apr 2023 04:28 PM
Last Updated : 13 Apr 2023 04:28 PM

விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம நிர்வாகிகள் 7 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்றம்

நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்கள்

சென்னை: விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம நிர்வாகிகள் ஏழு பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்தில் உள்ள குண்டலபுலியூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த அன்புஜோதி ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டிருந்த ஆதரவற்றோர் காணாமல் போனது தொடர்பாகவும், பாலியல் துன்புறத்தலுக்கு உள்ளானது தொடர்பாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆசிரம நிர்வாகிகள் ஜுபின் பேபி, அவரது மனைவி மரியா உள்பட ஏழு பேர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கு தொடர்பாக நடந்த நிகழ்வுகளை பட்டியலிட்ட காவல் துறை தரப்பு வழக்கறிஞர், ஆசிரமத்தில் இருந்து 167 பேர் மீட்கப்பட்டு, அவசர சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களிலும், தனியார் காப்பகங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 34 பேர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், 28 பேர் கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் விளக்கினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ஆதரவற்றோர் இல்லம் நடத்தியதன் மூலம் மனுதாரர்களுக்கு என்ன பலன் கிடைத்தது என கேள்வி எழுப்பினார். இதற்கு காவல் துறை தரப்பில், பல்வேறு இடங்களில் இருந்து நிதி பெறுவதாகவும், உடலுறப்பு விற்பனை நடப்பதாகவும் குற்றச்சாட்டும் உள்ளது எனவும் அது குறித்தும் விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து மனுதாரர் தரப்பில், அரசிடம் ஒப்புதல் பெற்று கடந்த 25 ஆண்டுகளாக சேவையாக இந்த ஆசிரமத்தை நடத்தி வருவதாகவும், ஆசிரமத்துக்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனவும், கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் இருந்து பலர் இந்த ஆசிரமத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனை அனுப்பிய மருந்துகளே அவர்களுக்கு வழங்கப்பட்டதாகவும், ஒரு புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜுபின் உள்ளிட்டோரின் ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

இன்று இந்த மனுக்கள் மீது தீர்ப்பளித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை செய்து வரும் ஆசிரம நிர்வாகிகள் மீதான வழக்கில் இரண்டு மாதங்களாகியும் புலன் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனவும், வெறும் யூகங்களின் அடிப்படையிலும், சந்தேகத்தின் அடிப்படையிலும் தனிநபர் சுதந்திரத்தை பறிக்க முடியாது எனக் கூறி ஏழு பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். ஜாமீன் வழங்கபட்ட அனைவரும் சென்னையில் தங்கியிருந்து சிபிசிஐடி அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் எனவும் நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x