Last Updated : 13 Apr, 2023 03:56 PM

 

Published : 13 Apr 2023 03:56 PM
Last Updated : 13 Apr 2023 03:56 PM

“சசிகலா ஆதரவாளர்கள் மீதான புகாரில் நடவடிக்கை இல்லை” - நீதிமன்றத்தில் ஆஜராகி சி.வி.சண்முகம் முறையீடு

திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு ஆஜராக வந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்

விழுப்புரம்: சசிகலா ஆதரவாளர்கள் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும், ஆபாச வார்த்தைகளால் தொலைபேசியில் பேசி வந்ததாகவும், இதேபோன்று சசிகலா வெளியிட்டுள்ள ஆடியோவில் தனக்கு எதிராக அவரது ஆதரவாளர்களை தூண்டிவிட்டதாகவும் கூறி முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ரோஷணை போலீஸில் கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் 9-ம் தேதி புகார் அளித்தார்.

இந்த புகார் மனு மீது அதே ஆண்டு ஜூன் 25-ம் தேதி கொலை மிரட்டல், அவதூறாக பேசியது, கூட்டுச் சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது, இவ்வழக்கு கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி "சங்கதியை பொறுத்தவரை பிழை" ( Mistake of fact ) என்று போலீஸார் தள்ளுபடி செய்யப்பட்டது. அதற்கான சம்மன் திண்டிவனம் நீதிமன்றத்தின் மூலமாகவே அனுப்ப வேண்டிய நிலையில், ரோஷணை காவல் துறையினர் நடப்பாண்டு மார்ச் மாதம் 19-ம் தேதி சி.வி.சண்முகத்தின் வீட்டிற்கு நேரடியாக சென்று வழங்கி உள்ளனர். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 30-ம் தேதி அதனை எதிர்த்து திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவின் மீதான விசாரணை திண்டிவனம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் நடுவர் கமலா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் ஆஜராகி தனது தொலைபேசியில் சசிகலா ஆதரவாளர்கள் மூலமாக கொலை மிரட்டல் விடுத்து பேசப்படுவதாகவும், ஆபாச வார்த்தைகளால் பேசப்படுவதாகவும், இது குறித்து என்னால் கொடுக்கப்பட்ட புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் காவல் துறையினர் அவற்றை முடித்து வைத்ததாகவும் கூறினார். மேலும், எனது புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து இவ்வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசியது, "சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது கொடுக்கப்பட்ட புகார் மீது காவல் துறை இதுவரை விசாரிக்காமல் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. இது குறித்து திண்டிவனம் , சென்னை, காவல் நிலையத்திலும் விழுப்புரத்திலும் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டது. ஆனால், எந்தப் புகார்கள் மீதும் இதுவரை திமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆள தெரியாத, சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க தெரியாத ஸ்டாலின் அரசை நம்பி எதிர்பார்த்து நான் இல்லை, திரும்பவும் பாதுகாப்பு கொடுக்க வேண்டுமென எதிர்பார்க்கவும் இல்லை. அதற்கான தேவையும் இல்லை. பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும் என வழக்கு தொடுக்கவில்லை. எனக்கு அச்சுறுத்தல் இல்லை என்பதை ஸ்டாலின் அரசு, அதனுடைய டிஜிபி, உள்துறை செயலாளர் உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.

இதுவரை 15 புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது. எந்தப் புகார்கள் மீதும், எதிர்தரப்பினர் மீதும் நேரடியாக விசாரிக்கவில்லை. ஆனால், புகார் மீது விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றதாக பொய்யான தகவலை காவல் துறை ஒரு மனுவாக தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கை முடித்து வைத்ததாக மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கை மறு விசாரணை செய்ய வேண்டும். இந்தப் புகார் மீதான புகாரில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை மறு விசாரணை செய்யப்பட வேண்டும்" என சி.வி.சண்முகம் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x