Published : 13 Apr 2023 05:06 AM
Last Updated : 13 Apr 2023 05:06 AM
சென்னை: தமிழகத்தில் 3 லட்சம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டதில், 1.60 லட்சம் பேருக்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்களின் விவரங்களை சரிபார்த்து தகுதியுள்ளவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் வருவாய்த் துறை மானிய கோரிக்கையின் மீது நேற்று நடைபெற்ற விவாதம்:
ஆர்.காமராஜ் (அதிமுக): அதிமுக ஆட்சியில் 5 லட்சம் முதியோருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, 90 சதவீதம் வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் ரூ.500 ஆக இருந்த ஓய்வூதியம் அதிமுக ஆட்சியில் ஆயிரமாக உயர்த்தப்பட்டது. திமுக ஆட்சியில் 14 லட்சம் பேருக்கு ரூ.1,200 கோடியாக ஒதுக்கப்பட்ட தொகை, எங்கள் ஆட்சியில் ரூ.4,200 கோடியாக உயர்த்தப்பட்டது.
அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிதான் ரூ.35 ஆக இருந்த ஓய்வூதியத்தை ரூ.500 ஆக உயர்த்தினார்.
ஆர்.காமராஜ்: கடந்த ஆட்சியில் ஓய்வூதியம் பெற்று வந்த 7 லட்சம் பேருக்கு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், கொள்கை விளக்ககுறிப்பில் 34.62 லட்சம் பேருக்கு
வழங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளீர்கள்.
அமைச்சர் ராமச்சந்திரன்: 7 லட்சம் பேரை நீக்கியுள்ளதாக கூறுகிறீர்கள். உங்கள் ஆட்சியில் 2014-15-ல் 4.38 லட்சம் பேர், அதற்கடுத்த 7 ஆண்டுகளில் 15.20 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். 7 லட்சம் பேரை பொறுத்தவரை, இரட்டைப் பதிவுகள், இறந்தவர்கள், ரூ.10 லட்சத்துக்கு அதிகமான மதிப்பில் சொத்து வாங்கியவர்களை நீக்கியுள்ளோம். அந்த தொகை அரசுக்கு வருவதில்லை.
கூடுதலாக 1 லட்சம் பேருக்கு...: அதற்குப் பதில் பதிவு மூப்பில் இருப்பவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் 3 லட்சம் பேர் நீக்கப்பட்டதில், 1.60
லட்சம் பேருக்கு திருப்பி கொடுத்தோம். புதிய விண்ணப்பங்கள் பெறாமல், பழைய விண்ணப்பங்களைப் பரிசீலித்து, விஏஓக்கள் மூலம் ஆய்வு செய்து கொடுத்துள்ளோம். யாருக்கும் நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் முதல்வருக்கு இல்லை. தகுதியிருப்பவர்களுக்கு வழங்கும்படி கூறியுள்ளார். இந்தாண்டு கூடுதலாக ஒரு லட்சம் பேருக்கு வழங்க உள்ளோம்.
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: சேலம் மாவட்டத்தில் 20 ஆயிரம் பேருக்கு தேர்தல் நேரத்தில் விண்ணப்பம் பெறாமல் கொடுக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்து நீக்கினோம். ஆனால், என் ஆட்சிகாலத்தில் முறையாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தகுதியானவர்களுக்கு வழங்கப்பட்டது. சட்டப்பேரவையில் 5 லட்சம் பேருக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டு 90 சதவீதம் வழங்கப்பட்டது. எனவே, அந்த விண்ணப்பங்களைப் பரி சீலித்து வழங்க வேண்டும்.
அமைச்சர் ஐ.பெரியசாமி: நான் அமைச்சராக இருந்தபோது 2010-ல் சேலத்தில் விண்ணப்பமே பெறாமல் 20 ஆயிரம் பேருக்கு வழங்கியதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறினார். அதற்கென்றே தாசில்தார் நியமிக்கப்பட்டு, மனுக்கள் பெறப்பட்டன. வீடு, நிலம், மகன் இருந்தால் கொடுக்கக் கூடாது என்ற விதிகளை நீக்கி, 60 வயதான அனைவருக்கும் ஓய்வூதியம் கொடுக்கும்படி அறிவித்தார் அப்போதைய முதல்வர் கருணாநிதி. அந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டது. 60 வயதுதான் வரம்பாக நிர்ணயிக்கப்பட்டது. நீங்கள் வந்தவுடன், என் தொகுதியில் இருந்தவர்களை நீக்கிவிட்டு, திருமங்கலம் தொகுதியில் சேர்த்து விட்டீர்கள். திமுக ஆட்சியில் 60 வயதான தாய், தந்தைக்கு கொடுத்தோம்.
பழனிசாமி: முதியோருககு வழங்கப்படும் ஓய்வூதியத்தில் எந்த அரசியலும் பார்க்கவில்லை. தகுதியின்றி வழங்கியதால் அந்த தாசில்தார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தவறுகள் நடைபெற்றதைத்தான் சுட்டிக்காட்டினேன். நிறுத்தப்பட்டவர்களுக்கு ஆய்வு செய்து வழங்கப்பட வேண்டும்.
ஐ.பெரியசாமி: எதிர்க்கட்சித் தலைவர் தவறாக கொடுக்கப்பட்டதாகக் கூறுகிறார். தவறுதலாகக் கொடுக்கப்படவில்லை. விதிகளை தளர்த்தி, வயது வரம்பு அடிப்படையில்தான் கொடுக்கப்பட்டது.
சாத்தூர் ராமச்சந்திரன்: 35 லட்சம் பேருக்கு கொடுக்க வேண்டும் என்ற கணக்கு உள்ளது. 5 லட்சம்பேரை கழித்துவிட்டால் நாங்கள் 30 லட்சம் பேருக்குதான் கொடுக்கிறோமா? தாலுகா அலுவலகத்தில் 200 பேருக்கு நிறுத்தப்பட்டால், அடுத்து தகுதியான 200 பேருக்கு வழங்குவோம். நிதி அரசுக்கு திரும்பி வருவதில்லை.
நாங்கள் யாருக்கும் ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்கவில்லை. 3 லட்சம் பேர் நீக்கப்பட்டதில், சரிபார்த்து 1.60 லட்சம் பேருக்கு கொடுத்துவிட்டோம். மீதமுள்ளவர்களுக்கும் விண்ணப்பங்களை சரிபார்த்து கொடுத்து விடுவோம். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT