Last Updated : 13 Apr, 2023 06:16 AM

 

Published : 13 Apr 2023 06:16 AM
Last Updated : 13 Apr 2023 06:16 AM

சிவகங்கை நகரில் அரசின் நில ஆவணத்தில் குழப்பம் - 1,500 பேர் பட்டா கிடைக்காமல் தவிப்பு

சிவகங்கை: சிவகங்கை நகரில் நில ஆவணத்தில் குழப்பம் இருப்பதால் 1,500-க்கும் மேற்பட்டோர் பட்டா கிடைக்காமல் பல ஆண்டுகளாக பரிதவித்து வருகின்றனர்.

சிவகங்கை நகரில் 2014-ம் ஆண்டு வரை பெரும்பாலானோருக்கு பட்டா இல்லாமல் இருந்தது. இதையடுத்து அவர்களின் தொடர் கோரிக்கையை ஏற்று 2014-ம் ஆண்டில் இருந்து நிலவரித் திட்டம் மூலம் நில உரிமையாளர்களுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டன.

இதற்காக நிலவரித் திட்ட தனி வட்டாட்சியர் அலுவலகம் ஏற்படுத்தப்பட்டது. தனி வட்டாட்சியர், ஏற்கெனவே நில உரிமையாளர்களிடம் இருந்த பத்திரம், ரசீது உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்து பல ஆயிரம் பேருக்கு பட்டாக்களை வழங்கினார்.

ஆனால் 1,500-க்கும் மேற்பட்டோரிடம் பத்திரம் இருந்தும் வருவாய்த்துறை ஆவணத்தில் அரசு புறம்போக்கு என இருந்தது. இதனால் அவர்களுக்கு பட்டா வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு பட்டா வழங்க அனுமதி கேட்டு, சிவகங்கை மாவட்ட நிர்வாகம் மூலம் நில நிர்வாக ஆணையரகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டது. தொடர்ந்து 5 ஆண்டுகளாக வலியுறுத்தியும் நில நிர்வாக ஆணையரகத்தில் இருந்து உத்தரவு வரவில்லை.

இதற்கிடையே, 2 ஆண்டுகளுக்கு முன்பு, சிவகங்கை நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியர் அலுவலகமும் மூடப்பட்டு கோப்பு கள் நில அளவைத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன. பட்டா கிடைக்காதவர்கள் நில அளவைத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், சிவகங்கை வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அலைந்து வருகின்றனர்.

இதில் பாதிக்கப்பட்டவரும், நகராட்சி கவுன்சிலருமான சரவணன் மற்றும் சிவா கூறியதாவது: பத்திரம் இருந்தும், பட்டா கிடைக்காததால் நகராட்சி அலுவலகத்தில் கட்டிட அனுமதி கிடைக்கவில்லை. வங்கிக் கடனும் பெற முடியவில்லை. ஆனால், அரசுக்கு வருவாய் கிடைக்கும் என்பதால், பத்திரப்பதிவு மட்டும் செய்து கொடுக்கின்றனர்.

பட்டா கேட்டு பல ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். ஆனால், எங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. பட்டா வழங்கும் வரை நகராட்சி அலுவலகத்தில் கட்டிட அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

இதுகுறித்து நில அளவைத் துறையினர் கூறுகையில், ‘நில நிர்வாக ஆணையரிடம் இருந்து உத்தரவு வராமல் எதுவும் செய்ய முடியாது. ஆனால் பத்திரப்பதிவு செய்யவோ, கட்டிட அனுமதி கொடுக்கவோ ஆட்சேபனை இல்லை என்றனர். கட்டிட அனுமதி கொடுக்க ஆட்சேபம் இல்லை என்று கூறினாலும், நகராட்சி அதிகாரிகள் மறுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x