Published : 25 Sep 2017 06:37 PM
Last Updated : 25 Sep 2017 06:37 PM
கூடலூர் அருகே தாயின் வறுமையைப் பயன்படுத்தி பச்சிளம் குழந்தைகயை ரூ.5 லட்சத்துக்கு விற்க முயன்ற செவிலியர் உட்பட நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள சேரங்கோடு பகுதியில் சிலர் குழந்தையை விற்க முயற்சிப்பதாக சென்னை சைல்டு லைன் அமைப்புக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதை அடுத்து கூடலூர் சைல்டு லைன் அமைப்பை சேர்ந்த தவமணி, தேவாலா போலீஸாரிடம் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் தேவாலா காவல்துறை துணை கண்காணிப்பாளர் சக்திவேல் தலைமையில் அக்பர்கான், லோகநாதன் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.இந்த குழுவினர் சேரங்கோடு, சின்கோனா பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை தீவிரமாக கண்காணித்து வந்தனர். அங்கு சுரேஷ், புவனேஸ்வரி தம்பதியினருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையை தான் சிலர் விற்க முயற்சித்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக தேவாலா டிஎஸ்பி சக்திவேல் கூறும் போது, ''குழந்தை கடத்தல் புகார் தொடர்பாக தேவாலா போலீஸார் ஆரம்ப சுகாதார நிலையத்தை கண்காணித்தோம். அங்குதான் குழந்தையை சிலர் விற்க முயற்சிப்பது தெரிய வந்தது. எனவே, போலீஸார் மாறு வேடத்தில் சென்று, குழந்தையை வாங்கும் இடைத்தரகர்கள் போல நடித்து, குழந்தை கடத்தல் கும்பலிடம் பேரம் பேசினர். இறுதியாக ரூ.5 லட்சத்துக்கு பேரம் படிந்தது.
பேரம் பேசியது போல ரூ.5 லட்சத்தை ஒரு சூட்கேசில் கொண்டு சென்றுள்ளனர். அங்கு கடத்தல் கும்பலை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர். குழந்தை கடத்தலில் ஈடுபட்ட சேரங்கோடு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் எலிசப்த(48), கூடலூரை சேரந்த ரேஸ்மா(40), எருமாடை சேர்ந்த கதிரேசன்(40) மற்றும் கொளப்பள்ளியை சேர்ந்த ரவிசந்திரன்(52) ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.பந்தலூர் நீதிமன்றத்தில் நான்கு பேரையும் ஆஜர்ப்படுத்திய போலீஸார் பின்னர் கோவை சிறைக்கு கொண்டு சென்றனர். புவனேஸ்வரி மற்றும் குழந்தையை போலீஸார் குழந்தை பராமரிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டனர்'' என்றார்.
வறுமையால் நேர்ந்த சோகம்
தேவாலா போலீஸார் கூறும் போது, ''புவனேஸ்வரி மற்றும் சுரேஷ் தம்பதிக்கு ஏற்கெனவே இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், மூன்றாவதாக புவனேஸ்வரி கருத்தரித்துள்ளார். வறுமையால் மூன்று குழந்தைகளை பராமிரக்க முடியாது என்பதால் கருவைக் கலைக்க முற்பட்டுள்ளார். அதற்கு ரூ.25 ஆயிரம் செலவாகும் என்பதால், கரு கலைக்கும் எண்ணத்தை கைவிட்டனர். குழந்தை பிறந்த பின்னர் குழந்தையை யாருக்காவது தானமாக வழங்கலாம் என தம்பதியினர் சேரங்கோடு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் எலிசபத்திடம் கூறியுள்ளனர். இதை பயன்படுத்திக்கொண்ட எலிசபத் பணத்தாசையால், குழந்தை கடத்தல் கும்பலுடன் சேர்ந்து குழந்தையை ரூ.5 லட்சத்துக்கு விற்க முற்பட்டுள்ளார்'' என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT