Published : 13 Apr 2023 04:43 AM
Last Updated : 13 Apr 2023 04:43 AM

சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்தும் நேரலையில் படிப்படியாக ஒளிபரப்பப்படும் - அப்பாவு விளக்கம்; அதிமுக வெளிநடப்பு

சென்னை: எதிர்க்கட்சித் தலைவர், சட்டப்பேரவையில் பேசியது ஒளிபரப்பப்படவில்லை என்று அதிமுகவினர் குற்றம்சாட்டி வெளிநடப்பு செய்த நிலையில், படிப்படியாக அனைத்தும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று வருவாய்த் துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது, அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, ‘‘எதிர்க்கட்சித் தலைவர் இன்று நேரமில்லா நேரத்தில் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான பிரச்சினையை எழுப்பினார். அதேபோல், பல்வேறு மக்கள் பிரச்சினைகளை பேரவையில் கவன ஈர்ப்பாக கொண்டு வருகிறார். இதற்கு முதல்வர், அமைச்சர்கள் பதில் அளிக்கின்றனர். இது நேரலையில் ஒளிபரப்பப்படுகிறது. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் பேசுவது மட்டும் நேரலையில் வருவதில்லை.

வேண்டுமென்றே எதிர்க்கட்சி தலைவர் பேசுவதை ஒளிபரப்பு செய்வது தடுக்கப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் பேசியபின் வரும் கவன ஈர்ப்பு நிகழ்வு தொடர்ந்து ஒளிபரப்பப்படுகிறது. சம்பந்தப்பட்ட யாரோ தவறாக இயக்கி வருகின்றனர். நான் பேரவைத் தலைவருக்கு மரபுப்படி வணக்கம் தெரிவித்தால் அதை மட்டும் எடுத்து வெளியில் அனுப்பி அதை விமர்சிக்கின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

அதற்கு பேரவைத்தலைவர் அப்பாவு, ‘‘அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி இதுகுறித்து என் கவனத்துக்கு கொண்டுவந்தார். பேரவை செயலரிடம் தெரிவித்து விசாரிக்கும்படி கூறியுள்ளேன்’’ என்றார்.

அப்போது, எஸ்.பி.வேலுமணி, ‘‘எதிர்க்கட்சித் தலைவர் மக்கள் பிரச்சினை குறித்து பேசியது தொடர்ந்து வெளிவராத காரணத்தால், வெளிநடப்பு செய்கிறோம்’’ என்று கூறி அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதன்பின், வருவாய்த் துறை விவாதத்தில் அதிமுக உறுப்பினர்கள் மீண்டும் பங்கேற்றனர்.

அப்போது நடந்த விவாதம் வருமாறு:

பேரவைத் தலைவர் அப்பாவு: எதிர்கட்சித் தலைவர் நேரமில்லா நேரத்தில் பேசியதை நேரடியாக ஒளிபரப்பவில்லை என்று அதிமுக கொறடா தெரிவித்தார். இன்றுவரை வினாக்கள் விடைகள் நேரம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இன்றுமுதல் முதல்கட்டமாக நிகழ்ச்சி நிரலில் இருப்பதையும் நேரடி ஒளிபரப்பு செய்யுமாறு முதல்வர் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில், கவன ஈர்ப்பு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. மற்றவைகள் எல்லாம் கடந்த காலத்தில் என்ன நடைமுறையோ, அது நடந்து கொண்டிருக்கிறது. இந்த அரசு மற்றும் முதல்வரின் எண்ணம் 100 சதவீதம் ஒளிபரப்ப வேண்டும் என்பதாகும். படிப்படியாக எல்லாம் ஒளிபரப்பு செய்யப்படும்.

எஸ்.பி.வேலுமணி: நீங்கள் பொதுவாகச் சொல்வது எல்லாம் சரி. எதிர்க்கட்சித் தலைவர் மக்கள் பிரச்சினைகளைப் பேசும்போது, அது மட்டும் ஏன் ‘கட்’ செய்யப்படுகிறது?

பேரவைத்தலைவர் அப்பாவு: எதிர்க்கட்சித் தலைவர் பேசுவது அவசியமானது, அவசியம் இல்லை என்று யாரும் சொல்லவில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: நான் பேசுவதை ஏன் தடை செய்கிறீர்கள். ஆளுங்கட்சி பேசுவதை மட்டும் கேட்க நாங்கள் இங்கே வரவேண்டுமா? பேரவை உங்களுடைய ஆளுமைக்கு உட்பட்டது. ஆளுங்கட்சிக்கு ஒரு நியாயம். எதிர்க்கட்சிக்கு ஒரு நியாயம் என்ற நிலை இருக்கக்கூடாது.

பேரவைத் தலைவர்: ஆளுங்கட்சிக்கு ஒரு நியாயம். எதிர்க்கட்சிக்கு ஒரு நியாயம் இங்கே செய்யவில்லை. கேரளா, ஒடிஸாவில் கேள்வி-பதில் மட்டும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இங்கு, வினாக்கள் விடைகள், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பார்க்காமல் எல்லோருக்கும் சமவாய்ப்பு கொடுத்து நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கவன ஈர்ப்பு தீர்மானமும் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. படிப்படியாக நேரமில்லா நேரம் உட்பட அனைத்தும் ஒளிபரப்பப்படும்.

பழனிசாமி: இந்த சட்டப்பேரவை ஆளுமை தங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறதா? அல்லது முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா?

பேரவைத் தலைவர்: என்னுடைய கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

பழனிசாமி: தாங்கள் நடுநிலையோடு செயல்பட வேண்டும். எங்களுடைய பிரச்சினையை தங்களுடைய கவனத்துக்கு கொண்டு வருவது எங்கள் கடமை.

பேரவைத் தலைவர்: ஏற்கெனவே என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதோ, அதே நடைமுறை பின்பற்றப்படுகிறது. நேரமில்லா நேரமும் ஒளிபரப்பு செய்யப்படும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

பின்னர் வருவாய்த் துறை அமைச்சர் உரையைப் புறக்கணித்து, அதிமுக உறுப்பினர்கள் வெளியேறினர். வெளிநடப்பு செய்தபின் எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘சட்டப்பேரவையில் முதல்வர் பேசுவதையும், அமைச்சர் பேசுவதையும் நேரடியாக ஒளிபரப்புகின்றனர். நாங்கள் பேசும்போது மட்டும் அதை இருட்டடிப்பு செய்கின்றனர். வெறும் பதிலை மட்டும் காண்பித்து என்ன பிரயோஜனம். என்ன கேள்வி என்று தெரியாமலேயே போய்விடும். ஆளுங்கட்சியைப் பற்றி எந்தவொரு தகவல் சொன்னாலும் உடனடியாக அதை அவைக் குறிப்பில் இருந்து நீக்கி விடுகிறார்கள். இது எப்படி ஜனநாயகம் ஆகும்’’ என்றார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x