Published : 12 Apr 2023 10:54 PM
Last Updated : 12 Apr 2023 10:54 PM
சென்னை: சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் செய்ய வேண்டும் எனத் தீர்மானத்தை மற்ற மாநில சட்டப்பேரவையிலும் நிறைவேற்ற வேண்டும் என பாஜக அல்லாத முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் மக்களாட்சி இன்று முக்கியமான கட்டத்தில் உள்ளது என்பதையும், நமது நாட்டில் கூட்டாட்சித் தத்துவம் என்பது படிப்படியாக மறைந்து வருவதையும் காண்கிறோம். மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநரின் கடமைகள் குறித்தும், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் கடமைகளையும், பொறுப்புகளையும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ள போதிலும், அவைகள் இப்போது மதிக்கப்படுவதோ அல்லது பின்பற்றப்படுவதோ இல்லை.
அதனால் மாநில அரசுகளின் செயல்பாடுகள் பெரிதும் பாதிக்கப்படுகிறது. மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் சில மாநில ஆளுநர்கள் காலவரையின்றி நிலுவையில் வைத்திருப்பதால் அந்தந்த மாநில நிர்வாக செயல்பாடுகள் அந்த குறிப்பிட்ட இனங்களில் முடங்கிப் போயிருக்கின்றன.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்ட ‘ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான மசோதா’ உள்ளிட்ட பல்வேறு சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்கும் பொருட்டு ஆளுநர் எழுப்பிய சந்தேகங்களை பலமுறை தெளிவுபடுத்தியும் அம்முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதே நிலைதான், பல்வேறு மாநிலங்களிலும் உள்ளன.
இச்சூழ்நிலையில், அந்தந்த மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயம் செய்யுமாறு ஒன்றிய அரசு மற்றும் குடியரசுத் தலைவரை வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது ஏற்புடையதாக இருக்கும் என்று கருதி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நோக்கம் மற்ற மாநிலங்களுக்கும் ஏற்புடையதாக இருக்கும் என நம்புகிறேன். எனவே மற்ற மாநில சட்டமன்றத்திலும் இதேபோன்ற தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம் மாநில அரசுகள் மற்றும் சட்டமன்றங்களின் இறையாண்மை மற்றும் சுயமரியாதையை நிலைநிறுத்துவதற்கான ஆதரவை வழங்க முடியும் உறுதியாக நம்புகிறேன்" என்று அக்கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT