Published : 12 Apr 2023 04:15 PM Last Updated : 12 Apr 2023 04:15 PM
பேரிடர் முன்னறிவிப்புக்கு TN-Alert செயலி, நில ஆவண விவரம் அறிய புதிய செயலி: அரசின் புதிய அறிவிப்புகள்
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
சென்னை: தமிழகத்தில் நிலநடுக்க கண்காணிப்பு மையம் அமைக்கப்படும் என்றும், நில ஆவண விவரங்களை அறிய செயலி உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.12) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் புதிய அறிப்புகளை வெளியிட்டார். அவற்றின் முக்கிய அம்சங்கள்:
பேரிடர் முன்னறிவிப்பு, மேலாண்மை மற்றும் தொடர் கண்காணிப்பு அமைப்புகளை வலுப்படுத்தி புதிய TN-Alert கைபேசி செயலி மற்றும் மேம்படுத்தப்பட்ட TN-SMART செயலி ரூ.12.50 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
மயிலாடுதுறையில் திருமைலாடி மற்றும் முதலைமேடு கிராமங்களில் ரூ.16 கோடி மதிப்பீட்டில் 2 பேரிடர் மீட்பு மையங்கள் அமைக்கப்படும்.
வெள்ள பாதிப்புக்கு உள்ளாகும் கடலூர் மாவட்டத்தின் கொள்ளிடம் ஆற்றின் இடது கரை ரூ.14.50 கோடி செலவில் பலப்படுத்தப்படும்.
தமிழகத்தில் சமீப காலங்களில் நிலநடுக்கம் உணர்வதை கருத்தில் கொண்டு தேசிய நில அதிர்வு மையத்தின் தொழில்நுட்ப உதவியுடன் நில நடுக்க கண்காணிப்பு மையம் ரூ.30 லட்சம் செலவில் அமைக்கப்படும்.
நில அளவை, நில ஆவணங்கள் தொடர்பாக இ-சேவைகள் தொடர்பான தகவல்களை அளிக்கும் வகையில் தொலைபேசி மையம் நிறுவப்படும். இடம் சார்ந்த நில ஆவணங்களின் விவரங்களை அறிய புதிய செயலி உருவாக்கப்படும்.
நில சீர்திருத்த சட்டத்தில் குறிப்பிட்டுள்ள குடும்பம் என்ற வரையறையில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சம உரிமை அளிக்கும் வகையில் திருமணமாகாத மகள்கள் மற்றும் திருமணமாகாத பேத்திகள் என்ற சொல் நீக்கப்படும்.
நலிந்தோர் உதவித் தொகை திட்டம் மற்றும் விபத்து நிவாரண உதவித் தொகை திட்டம் தொடர்பான சேவைகள் இணைய வழியில் வழங்கப்படும். வருவாய் துறையில் இனி வரும் காலங்களில் இதர சான்றிதழ்கள் அனைத்தும் இணைய வழியில் வழங்கப்படும்.
WRITE A COMMENT
Be the first person to comment