Published : 12 Apr 2023 03:03 PM
Last Updated : 12 Apr 2023 03:03 PM
புதுச்சேரி: “ஆட்சி செயல்படவில்லையென்றால் ரூ.8 கோடிக்கு சாலை அமைக்க பூமி பூஜை போட முடியுமா?” என்று நாராயணசாமி குற்றச்சாட்டுக்கு முதல்வர் ரங்கசாமி பதில் அளித்துள்ளார்.
புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதியில் சுத்துக் கேணி சாலை (கூனிமுடக்கு முதல் சுத்துக்கேணி பங்களா வரை), லிங்காரெட்டிப்பாளையம் முதல் சுத்துக்கேணி பங்களா சந்திப்பு வரையிலான ஆர்சி 32 சாலை, திருக்கனூர் முதல் மண்ணாடிப்பட்டு வரையிலான சாலை என மொத்தம் 14.7 கிமீ நீளத்துக்கு சாலை சீரமைக்க பொதுப்பணித் துறையால் திட்டம் தயாரிக்கப்பட்டது. அதற்கு நபார்டு மூலம் ரூ.8.12 கோடி நிதி உதவி பெற திட்டம் தயாரிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. இப்பணிக்கான ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டு பூமி பூஜை இன்று நடந்தது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட முதல்வர் ரங்கசாமி சாலை பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி கூறியதாவது: "மண்ணாடிப்பட்டு தொகுதியில் ரூ.8 கோடியில் சாலை மேம்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு கவனம் செலுத்தி வருகிறது. அனைத்து சாலைகளையும் மேம்படுத்த பணிகள் நடந்து வருகிறது. விரைவில் தார் சாலைகள் முழுமையாக புதுச்சேரியில் அமைக்கப்படும்.
ஒவ்வொரு பகுதியாக மேம்படுத்தும் பணிகள் நடக்கிறது. எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2 கோடி விிரைவில் ஒதுக்கப்பட்டு உள்சாலைகள் மேம்படுத்தப்படும். முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆட்சி செயல்படவில்லையென்று குற்றம்சாட்டுவதாக கேட்கிறீர்கள், அவ்வாறு இருந்தால் ரூ.8 கோடிக்கு சாலைக்கு பூமி பூஜை போட முடியுமா, பல ஆண்டுகளாக போடாத சாலைகளை போடுகிறோம்.
மதுபான தொழிற்சாலை உற்பத்தியால் வேலை வாய்ப்பு ஏற்படும். குறைந்த தண்ணீர்தான் எடுக்கப்படும். உற்பத்தியாவதை வெளியில் தான்எடுத்து செல்வார்கள். குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் திட்டம் 13 ஆயிரம் பேருக்கு தரப்பட்டுள்ளது. புதிதாக விண்ணப்பப் படிவம் தரப்பட்டு எம்எல்ஏ பரிந்துரைப்படி தரப்படும். விதவை, முதியோர் ஓய்வூதியம் போல் விண்ணப்பம் பெற்று தரப்படும்" என முதலவர் ரங்கசாமி கூறினார். இந்நிகழ்வில் தொகுதி எம்எல்ஏ-வும், அமைச்சருமான நமச்சிவாயம், பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயண் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் அப்பகுதியிலுள்ள டீக்கடையில் முதல்வர் டீ குடித்து விட்டு புறப்பட்டு சென்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT