Published : 12 Apr 2023 11:57 AM
Last Updated : 12 Apr 2023 11:57 AM

சிறுமிக்கு பாலியல் தொல்லை; திமுக கவுன்சிலர் நீக்கம்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

பேரவையில் விளக்கம் அளித்த முதல்வர்

சென்னை: விருத்தாசலம் நகராட்சி 30வது வார்டு திமுக கவுன்சிலர் பக்கிரிசாமி 5 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

கடலூர், விருத்தாசலம் நகராட்சி 30வது வார்டு திமுக கவுன்சிலர் பக்கிரிசாமி 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கட்சியில் இருந்து நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டார். இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார்.

இதற்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "கடலூர் மாவட்டம், விருத்தாசலம் சக்தி நகரில் இயங்கி வரும் தனியார் தொடக்கப் பள்ளியில் பயின்று வரும் 6 வயது சிறுமி 11ம் தேதி மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற உடன் தனக்கு வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த சிறுமிக்கு தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாயார் மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், அந்த பள்ளியின் தாளாளர் பக்கிரிசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். குற்றம் சாட்டப்பட்ட பக்கிரிசாமி, விருத்தாசலம் நகராட்சி 30வது வார்டு உறுப்பினராக உள்ளார் என்பதை அறிந்த உடன், அவர் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கி வைக்கப்பட்டுள்ளார்.

இந்த அரசை பொறுத்த வரையில், நான் செய்தியை கேள்விப்படவில்லை, தொலைக்காட்சியில் தான் பார்த்தேன் என்று கூற நான் தயாராக இல்லை. இந்தச் செய்தி அறிந்த உடன் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அரசை பொறுத்தவரையில் குற்றச் செயலில் ஈடுபவர்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயலில் ஈடுபடுபவர்கள் மனித குலத்திற்கே ஒரு அவமானச் சின்னம் என்று கருதுகிறோம். எனவே இது போன்ற குற்றச்செயலில் ஈடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்." இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x