Published : 12 Apr 2023 06:08 AM
Last Updated : 12 Apr 2023 06:08 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் இன்று (12-ம் தேதி) முதல் 5 நாட்கள் கோடை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 5 நாட்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது. இன்று (12-ம் தேதி) முதல் 16-ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை 104 டிகிரி பாரன்ஹீட் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
குறைந்த பட்ச வெப்பநிலை 22 முதல் 25 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும். வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்படும். மழைக்கான வாய்ப்பு இல்லை. காற்றின் ஈரப்பதம் 20 முதல் 70 சதவீதம் வரை இருக்கும். காற்றின் வேகம் கிழக்கு, வட கிழக்கு மற்றும் தெற்கு திசையிலிருந்து மணிக்கு 4 முதல் 6 கிமீ வேகத்தில் வீசக்கூடும்.
கால்நடை பராமரிப்பு: பகல் வெப்பம் அதிகரித்து வருவதால், கால்நடைகளில் பாலின் அளவு மற்றும் எடை குறையாமல் இருக்க பசுந்தீவனம் மற்றும் அடர்தீவனம் அளிக்க வேண்டும். வெப்பம் குறைவாக உள்ள வேளையில் அடர்தீவனத்தைத் தண்ணீரில் கலந்து அளிக்க வேண்டும்.
அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் சினை ஊசி போடலாம். வெப்ப அயர்ச்சியைக் குறைக்க, கால்நடைகள் குடிக்கும் தண்ணீரில் எலக்ட்ரோலைட் மற்றும் சமையல் சோடா கலந்து கொடுக்க வேண்டும்.
கோழிகளுக்கு... கோழிகளுக்கு நாள் முழுவதும் வழங்கும் குடிநீர் சூடாகாமல் குளிர்ச்சியாக இருக்குமாறு செய்ய வேண்டும். கோழித் தீவனத்தில் சோயா எண்ணெய், எலக்ட்ரோலைட்ஸ் மற்றும் உயிர்ச் சத்துக்கள் சேர்ப்பதன் மூலம் வெப்ப அயர்ச்சியைக் குறைக்கலாம். வெப்ப நேரத்தில் காலை 11 மணிக்கு முன்பே கோழித் தீவனம் அளிக்க வேண்டும்.
இரவு நேரத்தில் நள்ளிரவு 12 மணி முதல் 1 மணிவரை கூடுதலாக 1 மணி நேரம் பண்ணைகளில் விளக்குகளை எரியவிட வேண்டும். இதன் மூலம் கோழிகள் தீவனம் உண்பது அதிகரிக்கும். வெப்பம் அதிகமாக உள்ள மதிய வேளையில் பண்ணைக்குள் தெளிப்பான்களைப் பயன்படுத்தி தண்ணீர் தெளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT