Published : 12 Apr 2023 05:55 AM
Last Updated : 12 Apr 2023 05:55 AM

தாம்பரம் மற்றும் 15 ஊராட்சிகளை உள்ளடக்கி முழுமையான பாதாள சாக்கடை திட்டம்: பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை: தாம்பரம் மாநகராட்சியில் இணைக்கப்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் 15 ஊராட்சிகளுக்கும் சேர்த்து முழுமையான பாதாளச் சாக்கடை வசதி ஏற்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, தாம்பரம் உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜாவின் கேள்விக்கு பதிலளித்து அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: தாம்பரம் மாநகராட்சியில் பல்லாவரம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. பம்மல், அனகாபுத்தூர் பகுதிகளில் ரூ.211.15 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டம் அடுத்தாண்டு பிப்ரவரியில் முடிவுறும். தாம்பரம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் ரூ.160.97 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் கிழக்கு தாம்பரம் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் நிலையில் உள்ளது. மேற்கு தாம்பரம் பகுதியில் சென்னை குடிநீர் வாரிய பணிகள் 95 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் விடுபட்ட பகுதிகள் மற்றும்செம்பாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர், சிட்லபாக்கம் பீர்க்கண்கரணை, திருநீர்மலை பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை அடிப்படையில் புதிய ஒருங்கிணைந்த பாதாள சாக்கடை திட்டம் வகுக்கப்பட வேண்டியுள்ளது.

நகரின் அனைத்து பகுதிகளிலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்த, சென்னைகுடிநீர் வாரியம் மூலம் விரிவான திட்டஅறிக்கை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் பணிகள் முடிந்து, நிதி திரட்டி பணிகள் தொடங்கப்படும். இதில், தாம்பரம் மாநகராட்சி, சுற்றியுள்ள 15 ஊராட்சிகளையும் இணைத்து திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது.

நகரங்களில் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்தி குடிநீருக்கு உகந்ததாக செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதியமாநகராட்சிகள் உருவாக்கப்பட்ட பகுதிகளில் அருகில் உள்ள பேரூராட்சிகள், நகராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. விரிவாக்கப்பகுதிகளில் ஊராட்சிகளையும் இணைத்துள்ளோம். அங்குள்ள தலைவர்கள் பதவிக்காலம் முடிந்ததும் இணையும்.

இதை மனதில் கொண்டுதான், தாம்பரம் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளுக்கும் பாதாள சாக்கடை திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்தாண்டு அக்டோபர் மாதத்தில் ஊராட்சித் தலைவர்களின் பதவிக்காலம் முடியும்போது எந்தெந்த ஊரட்சிகளை தாம்பரம் மாநகராட்சியுடன் சேர்ப்பது என்பதை முடிவெடுத்து, அதற்கும்சேர்த்து பாதாள சாக்கடை கொண்டுவருவோம். இவ்வாறு அவர் பதிலளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x