Published : 12 Apr 2023 06:01 AM
Last Updated : 12 Apr 2023 06:01 AM

மக்களவைத் தேர்தல் பணியை தொடங்கியது திமுக: நிதி வழங்காமல் நெருக்கடி கொடுப்பதால் நிர்வாகிகள் அதிருப்தி

மதுரை: தமிழகத்தில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக ‘பூத்’ கமிட்டியை நியமித்து திமுக மக்களவைத் தேர்தல் பணியைத் தொடங்கிவிட்டது. ஆனால், நிதி வழங்காமல் கூட்டங்களை நடத்துமாறு கூறுவதால் கட்சித் தலைமை மீது நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர்.

நாட்டின் 18-வது மக்களவைத் தேர்தல் 2024 மே மாதம் நடைபெற இருக்கிறது. தமிழக அரசியல் கட்சிகள் தற்போதே கூட்டணி கணக்குகளைத் தொடங்கிவிட்டன. திமுக தலைமையில் ஓர் அணியும், அதிமுக தலைமையில் மற்றொரு அணியும், நாம் தமிழர் தனியாகவும் களம் இறங்கும் நிலை உள்ளது.

பாமக, தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகள் கூட்டணி தொடர்பாக இதுவரை எதுவும் அறிவிக்கவில்லை. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும்நிலையில் திமுக, அதிமுக கட்சிகள் ‘பூத்’ கமிட்டிகளை அமைத்துள்ளன. திமுக `பூத்’ கமிட்டியை அமைத்ததோடு மட்டுமின்றி சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக தேர்தல் பணிக் குழுக்களையும் அமைத்து ஒன்றியம் வாரியாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தத் தொடங்கிவிட்டது. ஆனால், நிதி ஏதும் வழங்காமல் கூட்டங்களை எப்படி நடத்த முடியும் என ஒன்றிய நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

இது குறித்து திமுக நிர்வாகிகள் கூறியதாவது: சட்டப்பேரவை தொகுதி வாரியாக தேர்தல் பணிக்குழுவை நியமித்து திமுக பணியைத் தொடங்கிவிட்டது. இந்தக் குழுவில் வெளிமாவட்ட நிர்வாகிகளும் இடம்பெற்று உள்ளனர். இவர்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் உதவியாகச் செயல்படுவார்கள். தற்போது கூட்டங்களை நடத்தி தங்களை அறிமுகம் செய்துகொள்கின்றனர்.

மேலும், தாங்கள் எதற்காக நியமிக்கப்பட்டுள்ளோம், தேர்தல் பணியில் சந்திக்கும் பிரச்சினைகளை உங்களிடம் இருந்து தலைமைக்கும், தலைமையின் தகவல்களை உங்களிடமும் கூற சில பணிகள் கொடுக்கப்பட்டுள்ளதால் அதற்கு நீங்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

தற்போது ஒன்றியம் வாரியாக செயல்வீரர்கள் கூட்டம் தொடங்கி உள்ளது. அதேநேரத்தில் கூட்ட அரங்குக்கான வாடகை, பங்கேற்க வரும் கட்சியினருக்கு சாப்பாடு, போக்குவரத்துச் செலவுகளை அமைச்சரோ, மாவட்டச் செயலர்களோ, கட்சி மேலிடமோ இதுவரை வழங்கவில்லை. சில மாவட்டங்களில் மட்டும் அமைச்சர்கள் வழங்குகிறார்கள்.

‘பூத்’ கமிட்டியில் தற்போது 10 பேர் இடம்பெற்றுள்ளனர். 100 வாக்காளர்களை ஒரு ‘பூத்’ கமிட்டி நிர்வாகி பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த 100 வாக்காளர்களை தேர்தல் வரை கண்காணித்து அவர்களை திமுகவுக்குச் சாதகமாக வாக்களிக்கச் செய்ய வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கூடுதல் வாக்காளர்கள் இருக்கும் பூத்தில் இன்னும் கூடுதல் ‘பூத்’ கமிட்டி அமைக்கப்படும். ‘பூத்’ கமிட்டியில் இடம்பெறுவதற்கு தனியாகப் படிவங்களை நிரப்பி அனுப்பச் சொல்லியுள்ளனர்.

இந்த கமிட்டியில் இடம்பெறுவோரின் உறுப்பினர் அட்டை எண், உட்பட பல்வேறு தகவல்களுடன் விண்ணப்பத்தைத் தேர்தல் பொறுப்பாளர்கள் மூலம் கட்சி மேலிடத்துக்கு அனுப்பக் கூறியுள்ளனர்.

இதற்கிடையே கட்சித் தலைமை ஒரு கோடி உறுப்பினர் சேர்க்கும் பணியை தொடங்கியிருப்பதால் அந்தப் பணிகளையும் இந்த தேர்தல் பொறுப்பாளர்கள், ‘பூத்’ கமிட்டியினர் பார்க்குமாறு கூறப்பட்டுள்ளது.

செலவுக்குப் பணமே கொடுக்காமல் வேலையைச் செய் என்றால் எப்படி முடியும். இதனால், ஒன்றிய நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பெரும்பாலும் அன்றாடம் வேலைக்குச் செல்பவர்கள்.

அவர்களுக்கு உறுப்பினர் சேர்க்கை, தேர்தல் பணி தொடர்பாக அடுத்தடுத்து வேலை கொடுப்பதால் அவர்களால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. மக்களவைத் தேர்தலுக்கு முன்பே திமுக தேர்தல் பணியை தொடங்கிவிட்டாலும் அதற்கான செலவகள் செய்யயார் பொறுப்பேற்பது என்ற அதிருப்தியும் ஏற்படத்தொடங்கிவிட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x