Published : 14 Sep 2017 02:21 PM
Last Updated : 14 Sep 2017 02:21 PM
பாளையங்கோட்டை ஜவஹர் திடலில் எதிர்க் கட்சியினர் நேற்று நடத்திய போராட்டத்தில் தன்னெழுச்சியை பார்க்க முடியவில்லை. நீட் தேர்வுக்கு எதிராகவும், மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் கடந்த வாரத்தில் பல்வேறு கல்லூரிகள், பள்ளிகளில் மாணவ, மாணவியர் தன்னெழுச்சியாக நடத்திய போராட்டத்தைப்போல் இப் போராட்டத்தில் உத்வேகம் இருக்கவில்லை.
திமுக தலைமையில் ஏராளமான கட்சிகள் நடத்தும் போராட்டத்தில் நூற்றுக்கணக்கில் கட்சியினர் திரள்வர் என்று போலீஸார் எதிர்பார்த்தனர். ஆனால், எதிர்பார்த்தபடி போராட்ட திடலில் கூட்டம் கூடவில்லை. திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளிலும் முக்கிய நிர்வாகிகள், அவர்களது ஆதரவாளர்கள் என்று வெகுசிலரே பங்கேற்றிருந்தனர்.
கூட்டம் இல்லை
தொழிற்சங்கங்களின் பலமிக்க கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருந்தும்கூட தோழர்கள் திரளவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வந்திருந்ததால் அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் வந்திருந்தனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு பொறுப்பு திமுக என்று மற்ற கட்சிகள் கடமைக்கு பங்கேற்று ஒதுங்கி கொண்டனவோ என்னவோ, அந்தந்த கட்சிகளின் கொடிகளை தலைக்குமேல் தூக்கி பிடிப்பதில் இருந்த ஆர்வம், ஆர்ப்பாட்ட கோரிக்கை முழக்கத்தில் இல்லை.
திமுக ஆக்கிரமிப்பு
மேடையில் மற்ற கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு முன்வரிசையில் இடம்தராமல் திமுகவினரே போட்டிபோட்டு ஆக்கிரமிப்பு செய்தது, ஒரு மணிநேர வெயிலுக்கு தாக்குப்பிடிக்காமல் நிழலுக்காக ஒதுங்கியது, முகநூலில் பதிவிட வேண்டும் என்று கைபேசிகளில் புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டியது என்றெல்லாம் போராட்ட களத்தில் காட்சிகள் அரங்கேறின.
“நீதிமன்றத்தின் கண்டிப்பு, போலீஸாரின் நடவடிக்கைகளுக்கு பயந்து பலரும் போராட்டத்தில் பங்கேற்க வராமல் இருந்திருக்கலாம். ஆனால், தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று நினைக்கும் திமுகவிலிருந்து எத்தனை ஆர்வமிக்க தொண்டர்கள் இப் போராட்டத்தில் பங்கெடுத்தனர்?” என்பது அக்கட்சியின் மூத்த தொண்டர் ஒருவரின் கேள்வியாக இருந்தது.
ராகுல் கோஷம்
நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டத்தில் ராகுல்காந்தி பிரதமராக வேண்டும், தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும். தமிழகத்தில் அரசு தொடங்கும் நீட் தேர்வு மையங்களை தீயிட்டு கொளுத்துவோம் என்றெல்லாம் மேடையில் சிலர் முழங்கியது சரியா?
நீட் தேர்வை ஏன் எதிர்க்கிறோம், அதனால் தமிழகத்துக்கு என்னென்ன பாதிப்புகள் என்பதை தெளிவாகவும், சுருக்கமாகவும் உரத்துப் பேசுவதற்கு ஜி.ராமகிருஷ்ணனை தவிர்த்து, மற்றவர்கள் முன்வராதது ஏன்?
போராட்டத்தை ஒன்றரை மணிநேரத்துக்குள் முடித்துக்கொண்டு விரைந்த திமுக நிர்வாகிகள், பாளையங்கோட்டை மார்க்கெட்டை ஒட்டிய நெரிசலான மனக்காவலம்பிள்ளை மருத்துவமனை சாலையில், கட்சி கொடிகள் கட்டிய கார்களில் அணிவகுத்தபோது, ஹாரன்களை அதிக சத்தத்துடன் ஒலிக்க வைத்து, மற்ற வாகனங்களை முந்திக்கொண்டு சென்றது அங்குள்ள கடைக்காரர்களையும், வியாபாரிகளையும், பொதுமக்களையும் ஆத்திரப்பட வைத்தது, திமுக நிர்வாகிகளுக்கு தெரியுமா? என பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT