Published : 18 Sep 2017 01:39 PM
Last Updated : 18 Sep 2017 01:39 PM
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கரிக்கையூர். இங்குள்ள அடர்ந்த வனப்பகுதியான பொறிவறையில்தான், தென்னிந்தியாவின் மிகப் பெரிய பாறை ஓவியம் உள்ளது. 53 மீட்டர் நீளம், 15 மீட்டர் அகலமான பாறையில், 500-க்கும் மேற்பட்ட பழங்குடியினரின் ஓவியங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
இங்குள்ள பாறை ஓவியங்கள், 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இடைக்கற்காலத்தைச் (Mesolithic period) சேர்ந்தவை என தொல்லியல் துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த ஓவியங்களை, குரும்பர் பழங்குடியின தலைமுறையினர் கையில் எடுத்திருப்பது, இந்த கலை அழியாமல் பல தலைமுறைகளுக்கு கொண்டு சேர்த்துள்ளது.
கோத்தகிரி அருகே குரும்பர் பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த ஆதிபெள்ளன் என்ற மாணவர், தன் இனத்தவரின் ஓவியக் கலைக்கு புதிய பரிமாணத்தை கொடுத்து வருகிறார். கடந்த ஓராண்டாக, தான் சார்ந்த பழங்குடியின கலாச்சாரத்தையும், வாழ்வியல் நிகழ்வுகளையும் படமாக வரையத் தொடங்கியுள்ளார். அதுவும் பென்சில், பேனாக்கள் மூலமாக அல்ல; ஒன்ன மரத்தில் வடியும் பால் போன்ற திரவத்தைக் கொண்டு... இவ்வகை திரவம் எளிதில் அழியா வனப்பு மிக்கதே அதன் சிறப்பு.
இதுதொடர்பாக ஆதிபெள்ளன் கூறும்போது, ‘எங்கள் மொழி பேச்சு வழக்காக மட்டுமே உள்ளதால், வாழ்வியல் முறைகளை சித்திரமாக வரைந்து ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஓவியங்கள் மற்றும் சித்திரங்களுக்கு புதிய பரிமாணம் கொடுக்கும் வகையில், சித்திரங்களை வரைந்து வாழ்த்து அட்டைகளை தயார்படுத்துகிறேன். இதற்கு, நீலகிரி பழங்குடியினர் நலச் சங்கம் (நாவா) மற்றும் வாம்ஸ் பள்ளி முதல்வர் பூவிழி ஆகியோர் ஊக்கமளித்து வருகின்றனர்’ என்றார்.
நீலகிரி பழங்குடியினர் நலச் சங்கச் செயலாளர் ஆல்வாஸ் கூறும்போது, ‘பழங்குடியினரின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பாதுகாக்க ‘நாவா’ இயங்குகிறது. பழங்குடியினர் கல்வி மற்றும் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆதிபெள்ளனுக்கு ஓவியம் வரைவது சிறப்பாக வருவதால், அவர் சார்ந்த குரும்பர் மக்களின் ஓவியக்கலையை பிரபலப்படுத்த வாழ்த்து அட்டைகள் தயாரிக்க ஊக்கப்படுத்தினோம்.
அவர் தயாரித்துள்ள வாழ்த்து அட்டைகள், பழங்குடியினர் பொருட்காட்சிகளில் காட்சிப்படுத்தி வருகிறோம். இதற்கு மக்களிடம் மிகுந்த வரவேற்புள் ளது’என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT