Published : 11 Apr 2023 06:32 PM
Last Updated : 11 Apr 2023 06:32 PM

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தால் கோரிப்பாளையம் உயர்மட்ட பாலம் பணியில் மாற்றம் ஏற்படுமா?

மதுரை; மெட்ரோ ரயில் திட்டத்தால் மதுரை கோரிப்பாளையத்தில் டெண்டர் விடப்பட்டுள்ள உயர்மட்ட பாலம் கட்டுமானப்பணியில் மாற்றும் ஏற்படுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

மதுரை மாநகரில் பொதுமக்களுடைய விரைவான பொது போக்குவரத்திற்காகவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை மெட்ரோ ரயில் திட்டம் ரூ.1,850 கோடியில் நிறைவேற்றப்படுகிறது. இதற்கான சாத்தியகூறுகள் ஆய்வுப்பணிகள் முடிந்து மத்திய, மாநில அரசுகளுடைய ஒப்புதல் பெறுவதற்கான அறிக்கை தயார் பணிகள் தொடங்கி இருக்கிறது. அடுத்த ஆண்டு இறுதியில் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் ஒத்தக்கடையையும், திருமங்கலத்தையும் இணைக்கும் வகையில் 31 கிலோ மீட்டர் தொலைவுக்கு திருமங்கலத்தில் இருந்து தோப்பூர், திருநகர், மதுரை கல்லூரி, காளவாசல், சிம்மக்கல், கோரிப்பாளையம், கே.புதூர், மாட்டுத்தாவணி, ஐகோர்ட் வழியாக ஒத்தக்கடை வரை அமைக்கப்படுகிறது. பயணிகள் ஏறி, இறங்குவதற்கு வசதியாக 18 ரயில் நிலையங்கள் அமைக்கப்படுகிறது. இந்த மெட்ரோ ரயில் வழித்தடம், அரசு மருத்துமவனை, முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோரிப்பாளையம் வழியாக செல்கிறது.

கோரிப்பாளையத்தில் இருந்து பூமிக்கடியில் வைகை ஆற்றை கடந்து மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்படுகிறது. தற்போது கோரிப்பாளையத்தில் தமுக்கத்தில் இருந்து உயர்மட்ட பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பணிகள் டெண்டர் விடப்பட்டுள்ளது. இப்பணிகள் ரூ.154 கோடியில் விரைவில் தொடங்குவதற்கு நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், கோரிப்பாளையம் பகுதியில் மெட்ரோ ரயில் திட்டம் பூமிக்கடியில் அமைக்க திட்டமிருப்பதால் இந்தத் திட்டம் முடித்தப் பிறகே கோரிப்பாளையம் உயர்மட்ட பாலம் அமைக்கக்கூடிய சூழல் ஏற்படலாம். அல்லது கோரிப்பாளையம் உயர் மட்ட பாலம் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஒரே நேரத்தில் இரு பணிகளையும் கோரிப்பாளையத்தில் மேற்கொள்ள முடியாது. ஏற்கெனவே கோரிப்பாளையம் சந்திப்பு பகுதியில் மக்கள், வாகன ஓட்டிகள், சாலையை கடக்க பகல் நேரத்தில் 15 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் வரை ஆகிறது. இந்த நிலையில், இந்தச் சவாலை எப்படி நெடுஞ்சாலைத்துறையும், மெட்ரோ ரயில் நிறுவனமும் எதிர்கொள்ளப் போகிறது என்பது தெரியவில்லை.

இது குறித்து நெடுஞ்சாலைத் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘மெட்ரோ ரயில் திட்டத்திற்கும், கோரிப்பாளையம் உயர்மட்ட பாலம் பணிக்கு சம்பந்தமே இல்லை. சென்னையில் கூட மேம்பாலங்கள் இருந்த இடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மெட்ரோ ரயில் திட்டம் தற்போதுதான் சாத்தியக் கூறுகள் பற்றி ஆய்வு முடிந்துள்ளது. இன்னும் அறிக்கை தயார் செய்து டெண்டர் விட்டு பணிகள் தொடங்க நீண்ட காலம் பிடிக்கும். அதற்குள் கோரிப்பாளையம் உயர்மட்ட பாலம் பணியை முடித்துவிடுவோம். மாற்றம் செய்வதற்கான வாய்ப்பு இல்லை’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x