Published : 11 Apr 2023 05:40 PM
Last Updated : 11 Apr 2023 05:40 PM

ஆரணியில் கைத்தறி பட்டுப் பூங்கா, ரூ.140 கோடியில் நெசவு பயிற்சித் திட்டம்: அரசின் புதிய அறிவிப்புகள்

சென்னை: இளைஞர்களுக்கான நெசவுப் பயிற்சி மற்றும் தொழில்முனைவோர் திட்டம் ரூ.140 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.11 ) கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி புதிய அறிப்புகளை வெளியிட்டார். இதில் கைத்தறி மற்றும் துணிநூல் துறைஅறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள் - கைத்தறித் துறை:

  • டாக்டர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு கைத்தறி பட்டுப் பூங்கா ஆரணியில் அமைக்கப்படும். இதன்மூலம் சுமார் 10,000 கைத்தறி நெசவாளர்கள் மற்றும் பதனீட்டாளர்கள் பயன்பெறுவர்.
  • இளைஞர்களுக்கான நெசவுப் பயிற்சி மற்றும் தொழில்முனைவோர் (Weavers Induction and Entrepreneurship Programme for Youngsters)திட்டம் ரூ.140 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
  • கூட்டுறவு சங்கங்களில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை கூலியில் 10 விழுக்காடு உயர்த்தி வழங்கப்படும்.
  • சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தில் கைத்தறி நெசவாளர்கள் சந்தா செலுத்தப்பட வேண்டிய கால அளவினை 25 ஆண்டுகளிலிருந்து 20 ஆண்டுகளாக குறைக்கப்படும்.
  • கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள நெசவாளர்கள் இயற்கை எய்தும் போது வழங்கப்படும் ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.2000லிருந்து ரூ.5000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
  • கைத்தறி நெசவாளர்கள் மிகுதியாக உள்ள பகுதிகளில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையுடன் இணைந்து நெசவாளர்களுக்கென சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.
  • கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.2.63 கோடி மதிப்பில் 3006 தறிகள், உபகரணங்கள் வழங்குதல் மற்றும் 56 நெசவாளர்களுக்கு ரூ.67.20 லட்சம் மதிப்பில் தறிக்கூடங்கள் அமைத்து தரப்படும்.
  • தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு கதர் மற்றும் கைத்தறி ரகங்களின் பாரம்பரியம் மற்றும் கலைநயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கைத்தறி ரகங்கள் பிரபலப்படுத்தும் திட்டம் (Handloom Outreach Programme) செயல்படுத்தப்படும்.
  • மாநிலத்தில் உள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலை மேம்படுத்தும் வகையில் விரிவான சந்தை ஆய்வு (Detailed Diagnostic Study) மேற்கொள்ளப்படும்.
  • கைத்தறி நெசவுக்கு பயன்படுத்தப்படும் சிட்டா நூல் சாயமிடும் முறைக்குப் பதிலாக, நவீன முறையில் சாயமிடும் சாத்தியக்கூறுகள் குறித்து தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகம் (SITRA)மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
  • தமிழ்நாட்டின் கைத்தறி தயாரிப்புகளுக்கான பொது வணிகச் சின்னம் மற்றும் தொகுப்பாக்கல் (Branding and Packing) தேசிய வடிவமைப்பு நிறுவனம் (National Institute of Design), அகமதாபாத் மூலம் உருவாக்கப்படும்.
  • தோடர் பழங்குடியின மக்களின் நலனுக்காக முதன்முறையாக நீலகிரி மாவட்டத்தில் தோடா எம்பிராய்டரி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனைச் சங்கம் (Toda Embroidery Weavers Co operative Production and Sales Society) தொடங்கப்படும்.
  • கைத்தறி ரகங்களை காட்சிப்படுத்தவும் மற்றும் சந்தைப்படுத்தவும் ஏதுவாக 4 மெட்ரோ நகரங்களில் "வாங்குவோர் விற்போர் சந்திப்பு" (Buyer Seller Meet) நடத்தப்படும்.
  • திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.35 லட்சம் செலவில் நீராவி கொதிகலன் மற்றும் தொட்டி சாயமிடும் இயந்திரம் (Steam Boiler and Tub dyeing Machine)நிறுவப்படும்.
  • கரூர் சாயச்சாலையில் ரூ.20.40 லட்சம் மதிப்பில் சீஸ் வடிவ நூல் (Cheese Yarn Dyeing)சாயமிடும் இயந்திரம் நிறுவப்படும்.
  • வாடிக்கையாளர்களின் கைத்தறி உபபொருட்களின் தேவையினை பூர்த்தி செய்வதற்கு உபபொருட்கள் விற்பனையகம் (Accessories Store) கோ-ஆப்டெக்ஸ் மூலம் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் சென்னையில் அமைக்கப்படும்.
  • கோ-ஆப்டெக்ஸ் மற்றும் தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் விற்பனை நிலையங்களில் 50 மேசைத் தறிகள் (Table Top Looms)நிறுவப்படும்.
முதல்வரிடம் வாழ்த்து பெறும் அமைச்சர் ஆர்.காந்தி

துணிநூல் துறை

  • அனைத்து ஜவுளிப் பிரிவுகளையும் ஒருங்கிணைந்த மாபெரும் ஜவுளி நகரம் (Textile City) ஒன்று பொது - தனியார் கூட்டாண்மையின் அடிப்படையில் (PPP Mode) சென்னையில் அமைக்கப்படும்.
  • தமிழ்நாட்டில் செயல்படும் அண்ணா கூட்டுறவு நூற்பாலை, ஆண்டிப்பட்டி மற்றும் பாரதி கூட்டுறவு நூற்பாலை, எட்டையபுரம் ஆகிய 2 நூற்பாலைகளில் ஒவ்வொன்றும் 0.995MW திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்படும்.
  • தொழில்நுட்ப ஜவுளிகள் தொடர்பான சர்வதேச கருத்தரங்கு சென்னையில் நடத்தப்படும்.
  • இந்தியாவில் உள்ள 12 தொழில்நுட்ப ஜவுளி ஆராய்ச்சி சிறப்பு மையங்களால் (Centre of Excellence) கண்டறியப்பட்டுள்ள தொழில்நுட்பங்களை பகிர்வதற்கும், தமிழ்நாட்டில் தொழில்நுட்ப ஜவுளி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி தொடர்பான கலந்தாய்வு மேற்கொள்ளவும் ஆராய்ச்சி மையங்கள் மற்றும் தொழில்முனைவோருடன் இரண்டு நாள் பயிலரங்கம் நடத்தப்படும்.
  • தமிழ்நாட்டில் ஜவுளித்தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில்முனைவோர்களுக்கு தொழில்நுட்பம் மற்றும் முதலீடு தொடர்பான வழிகாட்டுதல்கள் மற்றும் உதவிகள் வழங்கிட துணிநூல் துறை கட்டுப்பாட்டின் கீழ் பிரத்யேக "ஜவுளித்தொழில் ஊக்குவிப்பு பிரிவு" அமைக்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x