Published : 11 Apr 2023 01:11 PM
Last Updated : 11 Apr 2023 01:11 PM

கும்பகோணத்தில் 60 தெரு நாய்கள் கொன்று புதைப்பு - மாவட்ட ஆட்சியரிடம் புகாரளிக்க பொதுமக்கள் முடிவு

கொல்லப்பட்ட நாய்கள்

கும்பகோணம்: கும்பகோணம் வட்டம், பட்டீஸ்வரத்தில் நள்ளிரவில் 60 தெருநாய்களை அடித்துக் கொன்று திருமலைராஜன் ஆற்றின் கரையில் புதைத்தது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகாரளிக்க அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர்.

பட்டீஸ்வரம் ஊராட்சிக்குட்பட்ட 15வது வார்டு மற்றும் திருமேற்றழிகை, புதுப்படையூர், கோபிநாதப்பெருமாள்கோயில், நந்தன்மேடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அண்மைக்காலமாக தெரு நாய்கள் அதிகரித்ததால், அனைத்து பகுதிகளிலும் அதன் தொல்லை அதிகரித்தது. இதனால் சாலையில் செல்பவர்கள், வாகன ஒட்டிகள், குழந்தைகள், கோயிலுக்கு வருபவர்கள் உள்ளிட்ட பலரையும் இங்குள்ள நாய்கள் விரட்டவும், கடிக்கவும் செய்தன. இது குறித்த புகார் தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கும் சென்றது. அதன் பேரில், பட்டீஸ்வரம் ஊராட்சி நிர்வாகம் சார்பில், கடந்த 9-ம் தேதி இரவு நாய்கள் பிடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அவர்கள், பிடித்த நாய்களை அடித்துக் கொன்று புதைத்தாகக் கூறப்படுகிறது.

கொன்று புதைத்த நாய்கள் குறித்து, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து தமிழக உழவர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் ம.பிரபு கூறிறும்போது, ''பட்டீஸ்வரத்தில் கடந்த 9-ம் தேதி நாய்களைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டவர்கள், நாய்களைப் பிடித்து இரும்பு ராடுகளால் அதன் தலையில் அடித்துக் கொல்வதை, அப்பகுதியினர் பார்த்து கூச்சலிட்டதால், அருகிலுள்ளவர்கள் திரண்டு, அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவரிடம் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற அவர், இது போன்ற சம்பவம் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் பொது மக்கள் மேலும், வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், தகவலறிந்த பட்டீஸ்வரம் காவல் நிலைய போலீஸார் அந்த இடத்திற்குச் சென்று, விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததின் பேரில், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

சுமார் 60 நாய்களைக் கொன்று திருமலைராஜன்ஆற்றின் கரைகளில் புதைத்துள்ளதாகக் கூறப்படுவது குறித்து, கோட்டாட்சியரிடம் இன்றும், மாவட்ட ஆட்சியரிடம் வரும் 17-ம் தேதியும் அப்பகுதி மக்கள் திரண்டு சென்று புகாரளிக்கவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய ஊராட்சி மன்றத் தலைவர் ஏ.வெற்றிச்செல்வி, ”இப்பகுதிகளில் நாய்களால் தொல்லை அதிகரித்து வருவது குறித்து தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் சென்றது. இதனையடுத்து, கும்பகோணம் வட்டார வளர்ச்சி அலுவலர் கூறியதின் பேரில் நாய்கள் பிடிக்கப்பட்டன. ஆனால் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் என் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் இது போன்ற பிரச்சனைகளை எழுப்பி வருகிறார்கள். தற்போது நாய்கள் பிடிப்பதை உடனடியாக நிறுத்தி விட்டோம். பிடித்த நாய்களை கொள்ளிடம் கரையில் பாதுகாப்பாக விட்டு விட்டோம். இங்கு நாய்களைக் கொல்லவும் இல்லை, புதைக்கவும் இல்லை” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x