Last Updated : 11 Apr, 2023 11:11 AM

 

Published : 11 Apr 2023 11:11 AM
Last Updated : 11 Apr 2023 11:11 AM

புதுச்சேரியில் மாநில கட்சி எனும் அங்கீகாரத்தை இழந்தது பாமக: இந்திய தேர்தல் ஆணையம்

புதுச்சேரி: இந்திய தேர்தல் ஆணைய விதிகளின்படி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 2011 முதல் 2021 வரை நடைபெற்ற தேர்தலில் பாமக குறிப்பிட்ட சதவீத வாக்குகளோ, வெற்றிகளோ பெறாத காரணத்தால், அக்கட்சியின் மாநில அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பாமக அங்கீகரிக்கப்பட்ட ஒரு மாநில கட்சியாக இருந்து வந்தது. 1968ம் ஆண்டு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு ஆணையின்படி, 6ஏ விதிகளின் கீழ் 2009ம் ஆண்டு பொதுத்தேர்தலில் கட்சியின் வாக்களிப்பின் கீழ் பாமகவுக்கு மாநில அங்கீகாரம் வழங்கப்பட்டது. ஒரு அரசியல் கட்சி மாநில கட்சியாக அங்கீகாரம் பெறுவதற்கு மாநிலத்தில் சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்,
மாநிலத்தில் பதிவான மொத்த வாக்குகளில் 6 சதவீதத்திற்கு குறையாமல் வாங்கி இருக்க வேண்டும்.

அல்லது சட்டபேரவை பொதுத்தேர்தலில் குறைபட்சம் 2 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த அடிப்படையில் 2009ம் ஆண்டு பாமக புதுச்சேரி மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது. அதன்பிறகு, 2011ல் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தல், 2014ல் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தலிலும் இந்திய தேர்தல் ஆணையம் ஆய்வு செய்தது. இதில் 2011ல் புதுச்சேரியில் உள்ள 30 தொகுதியில் ஒரு தொகுதியில் கூட
பாமக வெற்றி பெறவில்லை. அதுமட்டுமல்லாமல், 2.48 சதவீதம்தான் வாக்கு வாங்கியது.

2014ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் பாமக வெற்றி பெறவில்லை. அத்தேர்தலில் 3.17 சதவீதம் வாக்குதான் பெற்றிருந்தது. 2016ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அத்தேர்தலில் 0.71 சதவீதம் தான் வாக்குகள் பெற்றிருந்தது. 2021ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக போட்டியிடவில்லை. இதையடுத்து, 6ஏ விதிகளின் படி விளக்கம் கேட்டு புதுச்சேரி பாமகவுக்கு இந்திய
தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு கூடுதல் அவகாசம் வழங்குமாறு கேட்டிருந்தது.

இருப்பினும், தேர்தல் ஆணைய விசாரணைக்கு பாமக ஆஜராகவில்லை. இதற்கிடையே கரோனா தொற்று பரவல் காரணமாக, அரசியல் கட்சியின் செயல் திறன் மறுஆய்வு செய்வது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 16.12.2021ல் மீண்டும் விசாரணை தொடங்கப் பட்டது. 29.12.2021ல் பாமகவிடம் விசாரணை நடத்த திட்டமிட்டிருந்தது. இந்த விசாரணைக்கும் பாமக ஆஜராகவில்லை. அதன் பிறகு, 20.3.2023ல் மீண்டும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டது. அப்போது கட்சியின் பிரதிநிதி வந்து கட்சியின் அங்கீகாரத்தை தொடர தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டார்.

2024ல் மக்களவை தேர்தலில் எங்களுடைய சின்னத்திலேயே போட்டியிட அனுமதி வழங்க வேண்டும் என கேட்டிருந்தார். ஆனால், 2011 முதல் 2021 வரை புதுச்சேரி யூனியன் பிரதேத்தில் நடைபெற்ற சட்டபேரவை மற்றும் மக்களவை பொதுத்தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் மற்றும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கை எல்லாம் இந்திய தேர்தல் ஆணையம் மதிப்பாய்வு செய்தது. அதைத்தொடர்ந்து நேற்று இந்திய தேர்தல் ஆணையம் புதிய உத்தரவை பிறப்பித்தது, அதன்படி, 6ஏ விதிகளின்படி கொடுக்கப்பட்ட பலன்களை பாமக முழுமையாக அனுபவித்து விட்டது.

இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு தொடர்பான விதிகளின்படி புதுச்சேரியில் பாமகவுக்கு வழங்கப்பட்டிருந்த மாநில கட்சி என்ற அங்கீகாரம் திரும்ப பெறப்படுகிறது. இக்கட்சி ஏப்ரல் 10 முதல் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியாகவே கருத்தப்படும். இதற்கான உத்தரவை இந்திய தேர்தல் ஆணைய செயலர் ஜெய்தேப் லகிரி பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு சென்னையில் உள்ள பாமக தலைவருக்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x