Published : 11 Apr 2023 05:00 AM
Last Updated : 11 Apr 2023 05:00 AM
சென்னை: ஆந்திராவில் இருந்து இடமாறுதல் செய்யப்பட்ட நீதிபதி பட்டு தேவானந்த், சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
ஆந்திரா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றிய பட்டு தேவானந்தை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இடமாறுதல் செய்து குடியரசுத் தலைவர் கடந்த மாதம் உத்தரவிட்டார்.
அதன்படி நீதிபதி பட்டு தேவானந்த், சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் புதிய நீதிபதியை வரவேற்று அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் பேசும்போது, ‘‘சட்டமேதை அம்பேத்கர் பிறந்த தினத்தில் பிறந்துள்ள நீதிபதி பட்டு தேவானந்த், உயிருடன் இருப்பவர்களுக்கு மட்டுமின்றி, இறந்தவர்களுக்கும் கண்ணியம் உண்டு என தீர்ப்பளித்துள்ளார்’’ என்றார்.
தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் பேசும்போது, ‘‘ஆந்திரா உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகித்த குறுகிய காலகட்டத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்ப்பளித்து முடித்து வைத்துள்ளார்’’ என்றார். இந்நிகழ்வில் சக நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிபதி பட்டு தேவானந்தின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.
பின்னர் ஏற்புரை வழங்கிய நீதிபதி பட்டு தேவானந்த், அம்பேத்கர் மற்றும் பெரியார் மேற்கொண்ட கலந்துரையாடல்கள் அரசியல் சாசனம் வகுப்பதில்முக்கிய பங்காற்றியுள்ளதாக வும், நாட்டில் பல்வேறு சட்டங்களை வகுக்க சென்னை உயர்நீதிமன்ற சட்ட வல்லுநர்கள் முக்கிய பங்காற்றியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், தீர்ப்புகள் வழங்குவது மட்டுமே நீதிபதிகளின் கடமையல்ல என்றும், அதை முறையாக அமல்படுத்த வைக்க வேண்டுமெனவும் குறி்ப்பிட்ட நீதிபதி, அமல்படுத்தாத தீர்ப்புகள் வெற்று காகிதங்கள் தான் என்றார்.
தற்போது இவருடன் சேர்த்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT