Published : 11 Apr 2023 04:28 AM
Last Updated : 11 Apr 2023 04:28 AM

அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர கால நிர்ணயம் அவசியம் - தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: சட்டப்பேரவைகளில் மாநில அரசுகள் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு, ஆளுநர்கள் ஒப்புதல் அளிக்க குறிப்பிட்ட காலநிர்ணயம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு மற்றும் குடியரசுத் தலைவரை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், அவை முன்னவர் துரைமுருகன், ‘‘சட்டப்பேரவை விதி 92(7)ல் அடங்கியுள்ள ‘ஆளுநரின் நடத்தை’ என்ற பதம், ‘ஆளுநரின் பெயரை விவாதத்துக்கு பயன்படுத்துவது’ என்ற பதம், விதி 287-ல் அடங்கியுள்ள ‘விதி 92(7)-ஐ இடைநீக்கம் செய்ய எடுக்கப்படும் முயற்சி’ என்ற பதம் ஆகியவற்றின் பயன்பாடுகளை நிறுத்திவைத்து, அரசின் தனி தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்’’ என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார்.

முன்னதாக, அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, பேரவைத் தலைவர் மு.அப்பாவு, ‘‘அவையில் இருக்கும் உறுப்பினர்களில் 4-ல் 3 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு, தீர்மானத்துக்கு இருக்க வேண்டும் என்பதால், எண்ணிக் கணிக்கும் முறைப்படி வாக்கெடுப்பு நடத்தப்படும்’’ என்று அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, அவைக் காவலர்கள் மூலம் பேரவை வாயிலில் உள்ள திரைச்சீலைகள் மூடப்பட்டன. தொடர்ந்து, தீர்மானத்துக்கு ஆதரவு, எதிர்ப்பு, நடுநிலை குறித்து கணக்கிடப்பட்டது. இதில், பாஜக உறுப்பினர்கள் எம்.ஆர்.காந்தி, சி.சரஸ்வதி ஆகியோர் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் இல்லாத நிலையில், எஞ்சியிருந்த 146 உறுப்பினர்களில் 144 உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, அரசின் தனி தீர்மானத்தை கொண்டுவந்தும், முன்மொழிந்தும் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: அரசியல் சட்டத்தை கடந்து, அரசியல் கட்சியின் கண்ணோட்டத்துடன் ஆளுநர் செயல்படுவதால், இப்படி ஒரு தீர்மானத்தை முன்மொழிய வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளார். ஆளுநருக்கு மரியாதை கொடுப்பதில் நான் இம்மியளவும் விலகியது இல்லை. அரசும் தவறியது இல்லை.

‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், மாநில மக்களுக்கும் வழிகாட்டுபவராகவும், நண்பராகவும் ஆளுநர் இருக்க வேண்டும்’ என்று உச்ச நீதிமன்ற தீர்ப்புகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் ஆளுநர், தமிழக அரசுக்கும், மக்களுக்கும் நண்பராக இருக்க தயாராக இல்லை என்பதை, அவர் பதவியேற்றதில் இருந்து மேற்கொள்ளும் செயல்கள் வெளிப்படுத்தி வருகின்றன. ஆளுநர் திறந்த மனதுடன் அரசுடன் விவாதிக்க வேண்டுமே தவிர, பொதுவெளியில் நிர்வாக நடவடிக்கைகளை விவாதிப்பது சரியல்ல. அவர் ஆளுநர் என்ற நிலையை தாண்டி, அரசியல்வாதியாக பேசுகிறார்.

சட்டத்தை உருவாக்கி நிறைவேற்றும் அதிகாரத்தை சட்டப்பேரவைகளுக்கு வழங்கிவிட்டு, அதற்கு ஒப்புதல் கையெழுத்து போடும் உரிமையை ஒரு நியமன ஆளுநருக்கு வழங்கியது மக்களாட்சி மாண்பு ஆகாது. எனவே, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை திருத்தும் முன்னெடுப்புகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

ஆளுநருக்கு அரசியல் சட்டம் தெரியவில்லை என்று கூறமாட்டேன். ஆனால்,அவருக்கு இருக்க வேண்டிய அரசியல்சட்ட விசுவாசத்தை, ‘அரசியல் விசுவாசம்’ அப்படியே விழுங்கிவிட்டது. அதனால்தான், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளையும் மீறி, அமைச்சரவை எடுத்த கொள்கை முடிவுகளை விமர்சித்தும், மதச்சார்பின்மைக்கு எதிராகவும் பேசுகிறார்.

ஆளுநர் பேசியதற்கு, பதிலுக்கு பதில் கூறி சட்டப்பேரவையை அரசியல் மன்றமாக மாற்ற விரும்பவில்லை. அதேநேரம், சட்டப்பேரவைக்கு அரசியல் நோக்கில் இடைஞ்சல் தர நினைத்தால், கைகட்டி வேடிக்கை பார்க்கமாட்டோம்.

பார்த்துப் பார்த்து உருவாக்கிய சட்டத்துக்கு, தன் விருப்பு வெறுப்பால் தடை போட்டுவிட்டு, உண்மைக்கு மாறான காரணங்களை கூறி மழுப்பினால், அதை நம்பும் அளவுக்கு ஏமாந்தவர்கள் இருக்கும் மாநிலம் அல்ல தமிழகம்.

சட்டப்பேரவைக்கு உள்ள இறையாண்மை மற்றும் சட்டம் இயற்றும் பொறுப்புகளின் அடிப்படையில், தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பிய பல மசோதாக்களுக்கு ஆளுநர் அனுமதி அளிக்காமல், காலவரையின்றி கிடப்பில்போட்டு, மக்களின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வருவதை மிகுந்த வருத்தத்துடன் பேரவை பதிவு செய்கிறது.

மாநில மக்களின் குரலாக விளங்கும் சட்டப்பேரவைகளில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு, அந்தந்தமாநில ஆளுநர்கள் ஒப்புதல் அளிக்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசையும், குடியரசுத் தலைவரையும் வலியுறுத்துகிறோம்.

சட்டப்பேரவையின் இறையாண்மைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து தமிழக மக்களின் நலனுக்கு எதிராக செயல்படுவதை தவிர்த்து, சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு உரிய காலத்துக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும்என்று ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் வழங்க வேண்டும் என்று இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது. இவ்வாறு முதல்வர் பேசினார்.

இந்த தீர்மானத்தை காங்கிரஸ், பாமக, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, மமக, கொமதேக, தவாக உறுப்பினர்கள் வரவேற்றனர்.

திமுக சார்பில் அவை முன்னவர் துரைமுருகன், தீர்மானத்தை வரவேற்று பேசியதை தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x